நாகர்கோவில்:சமையலில் தொடங்கி குளிப்பது, துவைப்பது, படிப்பது, விளையாடுவது, உண்ணுவது. உறங்குவது என மனிதனின் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகள் அனைத்திலும் நவீன தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தின் அச்சாரமாக நாட்டின் விஞ்ஞானத் துறை திகழ்ந்து வருகிறது.
இத்துறையின் கீழ் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வந்தாலும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நாட்டு மக்கள் மத்தியில் தனிகவனம் பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இஸ்ரோவின் தலைமைப் பொறுப்புக்கு, சாதாரண குடும்பத்தில் இருந்து வரும் எளிய பின்னணி கொண்ட நபர்கள் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். அந்த வரிசையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளியில் பயின்ற நாராயணன் இஸ்ரோ தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நாராயணன் இன்று தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவருக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. சக இஸ்ரோ அதிகாரிகள், அலுவலர்களும் நாராயணனை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் பல முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நாராயணனின் சொந்த கிராமமான மேலகாட்டுவிளையில் இன்று மாலை நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் பங்கேற்கிறார்.
முன்னதாக, நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில், இஸ்ரோ தலைவர் நாராயணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளருக்கு அளித்த பிரத்யேக நேர்காணல்:
கேள்வி: ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இஸ்ரோவின் தலைவராக உயர்ந்துள்ளீர்கள். இன்றைய மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பதில்:சாதாரண கிராமத்தில் அரசு பள்ளியில் தான் நான் படித்தேன். அதன் பிறகு டிப்ளமோ முடித்து இஸ்ரோவில் பணியில் சேர்ந்தேன். நேற்றுடன் இஸ்ரோவில் சேர்ந்து 41 ஆண்டுகள் பணி முடித்துள்ளேன். என்னைப் போன்ற பல விஞ்ஞானிகள் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான். எந்த ஊரில் இருந்து வந்தோம் என்பது முக்கியமில்லை; எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பதும் முக்கியமில்லை. எப்படி படிக்கிறோம் என்பது தான் முக்கியம்.
ஒரு இளைஞன் வெற்றியடைய வேண்டுமென்றால் படிப்பு மட்டும் முக்கியமல்ல. அனைத்து வகையிலும் மற்றவர்களுக்கு சேவை செய்யக்கூடிய நல்ல உள்ளத்தோடு வளர வேண்டும். கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை. உழைப்பும் வேண்டும்; நம் நாட்டு மக்களுக்கும், தேசத்திற்கும் என்ன செய்ய வேண்டும் என்ற பரந்த மனதோடு பணியாற்ற வேண்டும்.
"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு" என்ற குறளுக்கு ஏற்ப உள்ளத்தை பொறுத்து நமது வளர்ச்சி அமையும் என்பதை வலிமையாக பதிவு செய்கிறேன். மாணவர்கள் குறிக்கோளுடன் படிக்க வேண்டும். அனைத்து விதத்திலும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சொந்த நாடு, சொந்த ஊர் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மனப்பான்மையோடு படித்து வேலைக்கு செல்ல வேண்டும்.
1947 இல் சுதந்திரம் அடைந்த பிறகு சாதாரண ஒரு நாடாக இருந்த இந்தியா தற்போது பெரிய அளவில் முன்னேறி உள்ளது. நம் நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எனவே, நம் தேசம் வளர்ச்சியடைந்த நாடாக மாற மாணவர்கள் சேவை செய்ய வேண்டும்.
கேள்வி:இஸ்ரோவில் வேலை வாய்ப்புகள் குறித்து சொல்லுங்கள்? அந்த வேலையை பெறுவதற்கு இளைஞர்கள் எப்படி தயாராக வேண்டும்?
பதில்:இஸ்ரோவில் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும் என்பது இல்லை. இஸ்ரோ சார்ந்த பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் இருக்கிறது. செயற்கைக்கோள் இஞ்சின் போன்றவற்றை பல்வேறு தனியார் நிறுவனங்கள் தயாரித்து தருகின்றன. இதுபோன்ற வேலைவாய்ப்புகளையும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இஸ்ரோவில் நேரடியாக சேர்ந்தால் வரவேற்கத்தக்கது. இல்லாவிட்டாலும் வெளி நிறுவனங்களில் பணியில் சேரலாம்.
கேள்வி: இஸ்ரோவில் ஒரு நீண்ட நெடிய அனுபவம் பெற்றுள்ள நீங்கள் உங்களது பணியில் சாதனையாக எதை கருதுகிறீர்கள்?
பதில்:குறிப்பிட்ட ஒன்றை மட்டும் சாதனை என்று நான் சொல்ல முடியாது. இஸ்ரோவின் எந்தவொரு சாதனையும் தனிப்பட்ட நபரின் சாதனை கிடையாது. இது கூட்டு முயற்சிக்கு கிடைத்துவரும் வெற்றி. இஸ்ரோவில் 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவரின் சாதனையாகவும் இஸ்ரோலின் சாதனைகளை பார்க்கிறேன்.
1962 இல் இருந்து இன்று வரை ஆறு விதமான ராக்கெட்டுகள் தொழிற்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்துள்ளோம். 131 செயற்கைக்கோள்கள்களை, பல்வேறு தொழிற்நுட்பங்களுடன் பல்வேறு வகையில் தயார் செய்துள்ளோம். இவை அனைத்தும் ஒரு தனிப்பட்ட நபரின் வெற்றி என்று சொல்ல முடியாது. இஸ்ரோவின் 20,000 ஊழியர்களின் வெற்றியாகும்.