தஞ்சாவூர்: தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் தஞ்சாவூர் அரண்மனை கீழராஜ வீதியில் கடந்த பிப்ரவரி 16 முதல் 18ஆம் தேதி வரை, மூன்று நாட்கள் தினமும் காலை 10 மணி முதல் 7 மணி வரை ஓவியச் சந்தை சிறப்பாக நடைபெற்றது. இந்த ஓவியச் சந்தையானது ஓவியர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான ஓவியங்களைப் பார்த்து ரசிக்கும் வகையிலும், சிறப்பாக ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
தமிழகத்தின் தலைசிறந்த ஓவியர்கள் முதல், வளரும் இளம் ஓவிய கலைஞர்கள் வரை 60-க்கும் மேற்பட்டோர், அரங்குகளில் தங்களது ஓவியக் காட்சிப் படைப்புகளைக் காட்சிப்படுத்தி, கண்காட்சியாகவும் மற்றும் விற்பனையும் செய்தனர். இந்த ஓவியக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தனது குடும்பத்தினருடன் சென்று பார்வையிட்டு ரசித்தார்.
இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கலை ஆர்வலர்கள், எழிற்கலைஞர்கள் மற்றும் குடும்ப தலைவிகளுக்கான கலைத்திறன் போட்டியும் நடைபெற்றது. மேலும், தஞ்சாவூர் ஓவிய பயிலரங்கம், நவீன ஓவிய பயிலரங்கம், கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர்களின் சிற்ப வடிவமைப்பு மற்றும் சித்திரப் பிரதிமை நிகழ்வுகள் ஆகியவையும் நடைபெற்றது.
சோழ மன்னர்கள், நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் காலத்து ஓவியங்கள் மற்றும் தஞ்சாவூர் அரண்மனை சுவர் நுழைவாயில் முதல் இரண்டாவது நுழைவாயில் வரை, 500 அடிக்கு இருபுறமும் கண்கவர் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும், ஓவிய கண்காட்சியுடன் வீணை, வயலின் மற்றும் சாக்ஸபோன் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.