வேலூர்:அரசுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி சாமி சிலை வைத்ததால், வருவாய்த்துறையினர் சாமி சிலையை அகற்றியுள்ளனர். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சாமி ஆடி சிலையை அகற்றக்கூடாது என வாக்குவாததில் ஈடுபட்டுள்ளனர். அனுமதியின்றி சிலை வைத்து வழிபாடு செய்ததால் சிலையை அகற்றியுள்ளதாக காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனி தெரிவித்துள்ளார்.
காட்பாடி அடுத்த எல்.ஜி.புதூர் பகுதியில் பொன்னியம்மன் கோயில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு அப்பகுதி மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், அக்கோயிலுக்கு எதிர்பகுதி இடத்தில், வேறொரு பொன்னியம்மன் சிலையை வைத்து அப்பகுதி மக்கள் வழிபட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அது வருவாய் துறைக்கு சொந்தமான இடம் என்பதால், வருவாய்த் துறையினர், இன்று, சனிக்கிழமை (நவ.22) அப்பகுதியில் வைக்கப்பட்ட சிலையை கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பெண்கள் சிலர் சாமி வந்து ஆடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, 200க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர். சாமி வந்து ஆடிய பெண்கள் மயக்கம் அடைந்து விழுந்த நிலையில், அவர்களை மற்ற பெண்கள் அழைத்துச் சென்றனர்.