சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சாதி, இன உணர்வுகளால் உருவாக்கும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் வழிவகுத்திட அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அளித்துள்ளது. இதில் 650 பக்கம் கொண்ட அறிக்கையில் 14 அத்தியாயங்களும், 6 இணைப்புகளும் இடம் பெற்றுள்ளன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தீர்க்க வேண்டிய 20 உடனடி பரிந்துரைகளும், 3 நீண்ட காலத்தில் தீர்க்க வேண்டிய பரிந்துரைகளும் இதில் அடங்கியுள்ளது.
சந்துருவின் குழு அளித்துள்ள பரிந்துரையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாடப்புத்தகங்களில் சமூக நீதி, சாதியால் வரக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் குறித்த பாடங்களை புதிதாக சேர்க்க வேண்டும். பள்ளி வகுப்பறைகளில் அகர வரிசைப்படி மட்டுமே மாணவர்களை அமர செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அகரவரிசையில் அமராமல் முன் வரிசையில் அமர்வதற்கு அனுமதிக்கலாம். ஆனால் அவர்களின் பெயர் வருகைப் பதிவேட்டில் அகர வரிசைப்படியே இருக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
மேலும், ''பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சாதிப் பெயர்களை வருகை பதிவேடுகளில் குறிப்பிடக் கூடாது. மாணவர்களின் சாதி பதிவை கொண்டிருக்கக்கூடிய ஆவணங்களை அந்தந்த கல்லூரி மற்றும் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் உரிய உயர் அதிகாரிகள் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து மாணவர்களை தலைமை ஆசிரியர் தமது அறைக்கு அழைத்து மட்டுமே கூற வேண்டும். இதனை மீறும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.