சென்னை:கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த நசரத்பேட்டையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் நண்பர் ஒருவருடன் அறை எடுத்து தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (மே.2) மாலை சுமார் 6 மணி அளவில் இளம்பெண்ணின் பெற்றோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நசரத்பேட்டை காவல்துறையினர், உங்கள் மகள் தங்கியிருந்த அறையிலேயே தற்கொலை செய்து இறந்து விட்டதாகவும், உடனடியாக நசரத்பேட்டை காவல்நிலையம் வருமாறும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, சில மணி நேரங்களில் நசரத்பேட்டை காவல்நிலையம் வந்தடைந்த உயிரிழந்த பெண்ணின் உறவினர், பெண்ணின் உடலைப் பார்த்ததும், மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், உடலில் காயங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், பெண்ணின் அறையில் தங்கியிருந்த ஆண் நண்பர் மீது தங்களுக்குச் சந்தேகம் உள்ளதாகவும், அவரைக் கைது செய்து விசாரிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், காவல்துறை சார்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, நசரத்பேட்டை காவல்நிலைய வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:கைவிரல்கள் ஒட்டிப் பிறந்த குழந்தை.. அறுவை சிகிச்சை மூலம் இயல்பாக்கிய தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்! - THOOTHUKUDI Child Finger Surgery