சென்னை:சென்னையைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், அதில் 11 வயதான சிறுமி ஒருவர் தனது உறவினர் வீட்டிற்குச் சென்று தனக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் பிறப்புறுப்பில் வலி இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், தனது உறவினர் தன்னிடம் தொடர்ந்து தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அச்சிறுமியின் உறவினர், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நீண்ட நாட்களாக சிறுமி பாலியில் சீண்டலுக்கு ஆளாக்கப்படுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சிறுமியின் உறவினர் புகார் அளித்துள்ளனர்.
அப்புகாரின் அடிப்படையில், சிறுமியை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், 16 வயதே ஆன சிறுமியின் உறவினர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்தது தெரிய வந்துள்ளது. அதேபோல், அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு 16 வயது சிறுவன் சிறுமியை மிரட்டி பாலியல் சீண்டல் அளித்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபரும் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனிடையே, சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்த உறவினரின் நண்பர் என பலர் அச்சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதும், சுமார் 6 மாதங்களாக பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வேதனைகளை அனுபவித்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.