சென்னை: சென்னை நீலாங்கரை முதல் அக்கரை வரையில் ஆறு வழித்தடமாக சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறையின் சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளுக்கு இடையூறாக இருந்த வளரும் தன்மையுடைய மரங்களை பாதுகாப்பாக வேறு இடத்தில் மறுநடவு செய்வதற்கும், மற்ற மரங்களை வெட்டி அகற்ற சென்னை மாவட்ட பசுமைக்குழுவிடம் ஒப்புதல் கோரப்பட்டது. மாவட்ட பசுமைக் குழுவின் ஒப்புதல் கிடைத்த பிறகு மரங்களை மறுநடவு செய்தனர்.
அவ்வாறு மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ளன. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில், கடந்த ஆண்டு ஜூலை 12-ல் நடைபெற்ற மாவட்ட பசுமைக் குழு கூட்டத்தில் 97 மரங்களை மறுநடவு செய்வதற்கும், இடையூராக உள்ள 758 மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் உத்தரவு வழங்கப்பட்டது.
இதற்கு ஈடாக 1:10 என்ற விகிதத்தில் 7 ஆயிரத்து 580 புதிய மரக்கன்றுகளை நடவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீலாங்கரை முதல் அக்கரை வரை உள்ள பகுதியில் 758 மரங்களை அகற்றுவதற்கு ஏலம் விடப்பட்டு, அவை அகற்றப்பட்டு வருகிறது. இங்கு வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக 7 ஆயிரத்து 580 புதிய மரக்கன்றுகளை நடவு செய்வதற்கு தேவைப்படும் 3.26 கோடி ரூபாயை வனத்துறைக்கு செலுத்துமாறு சென்னை மாவட்ட வன அலுவலரிடம் இருந்து கோரிக்கை வந்தது.