சென்னை: 18வது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், பாஜக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை தாண்டி இந்தியா கூட்டணி 234 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பது காங்கிரசுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரை வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி மிக முக்கியமான தொகுதியாகும்.
இத்தொகுதி தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், எளியவர்கள் மற்றும் தினக்கூலிகளிகளைக் கொண்ட பெரும்பான்மையான மக்களை உள்ளடக்கியுள்ளது. வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை, கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற கலாநிதி வீராசாமி தான் தற்போதும் வேட்பாளாராக களம் இறக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார்.
2019ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் 63.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில், தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் 60.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் கடந்த முறையை விட தற்போது 3.35 சதவீத வாக்குப்பதிவு குறைந்துள்ளது தெரிகிறது.
அதேபோல, வட சென்னையில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி கடந்த 2019ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், இந்த தேர்தலிலும் அவர் பெற்ற வாக்குகளை ஒப்பிட்டால், கடந்த முறையை விட தற்போது குறைவாகவே உள்ளது.
கடந்த முறை வட சென்னை தொகுதியில் 5,90,986 வாக்குகளைப் பெற்ற கலாநிதி வீராசாமி, தற்போது 4,97,333 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் கலாநிதி வீராசாமிக்கு எதிராக முக்கியமானவர்களாக அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜக சார்பில் பால் கனகராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதினி ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக சார்பில் போட்டியிட்ட கலாநிதி வீராசாமி 4,97,333 வாக்குகள் பெற்று 3,39,222 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக சார்பில் போட்டியிட்ட ராயபுரம் மனோ 1,58,111 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக பாஜக 1,13,318 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 95,954 வாக்குகளும் பெற்றுள்ளது.