தமிழ்நாடு

tamil nadu

பட்ஜெட் 2024; தொழில் சங்கங்களின் வரவேற்பும் எதிர்ப்பும்! - Budget 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 5:34 PM IST

Union Budget 2024: 2024-25ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இந்திய தொழில் கூட்டமை மற்றும் இந்திய வர்த்தக சபை வரவேற்றுள்ள நிலையில், இந்த பட்ஜெட்டால் சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை என்று தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் மற்றும் வணிகர்கள் சங்கத்தினர்
நிர்மலா சீதாராமன் மற்றும் வணிகர்கள் சங்கத்தினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்:18வது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று (ஜூலை 22) தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார்.

வணிகர்கள் சங்கத்தினர் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய கோயம்புத்தூர் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், "அனைத்து துறைகளின் வளர்ச்சியினை நோக்கமாக கொண்ட பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை, சிறு குறு தொழில்கள், இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் மகளிர் பங்களிப்பு உள்ளிட்ட 9 நோக்கங்களை மையமாகக் கொண்டு இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழில்துறையினர் பயன்பெறும் விதமாக ஃபெர்ரஸ் மற்றும் காப்பர் உலோகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்கிராப் தொழில் மேம்படும்.

மேலும், மூலப்பொருட்கள் விலையும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் உற்பத்தி அதிகரிக்கும். இதுமட்டுமல்லாது, தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்க வரி குறைப்பு தங்கம் உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, பயன்பாட்டாளர்களுக்கும் பயனளிக்கக்கூடிய அம்சமாக அமைந்துள்ளது.

சிறு, குறு தொழில்களுக்கான கடன் உதவியை வங்கிகளிடம் பெறுவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது சிறு, குறு தொழில்களை விரிவுபடுத்த பேருதவியாக அமையும். இதனைத் தவிர்த்து, நாட்டின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.11 லட்சம் கோடி எனும் பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில்துறையினர் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு மற்றும் மக்களின் வளர்ச்சிக்கும் உதவியாக அமையும். அந்த வகையில், இந்த பட்ஜெட் அனைத்து துறையினருக்குமான பட்ஜெட்டாக அமைந்துள்ளது" என தெரிவித்தார்.

இதேபோல, மத்திய பட்ஜெட் அறிவிப்பின் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து கோவையில் உள்ள இந்திய வர்த்தக சபை நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பேசிய அமைப்பின் தலைவர் ஸ்ரீராமுலு, "அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை சாமானிய மக்களுக்கு பயன் தரும். மாணவர்களுக்கு வட்டி மானியத்துடன் கல்விக்கடன் உதவி வழங்குவது வரவேற்கத்தக்கது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டிற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாட்டின் சாலை, ரயில்வே மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

மேலும், மருத்துவ உபகரணங்கள், செல்போன் உபகரணங்கள், காப்பர் உலோகம், தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி மற்றும் சுங்கவரி குறைக்கப்பட்டிருப்பது அவை சார்ந்த தொழில்களை மேம்படுத்தும். கரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறு குறு தொழில்களுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கும் புதிய கடன் உதவி, நெருக்கடியில் உள்ள தொழில் நிறுவனங்களை மேம்படுத்த உதவும்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே, பட்ஜெட் தொடர்பாக தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "குறு சிறு தொழில்களுக்கான வங்கி வட்டி வீதம் 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. குறு, சிறு தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் தனி நிதி ஒதுக்கீடு இல்லை. பொதுவாக 2024-25 பட்ஜெட்டால் குறு சிறு தொழில் முனைவோர்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:மத்திய பட்ஜெட் எதிரொலியால் விலை குறைய உள்ள பொருட்கள்?

ABOUT THE AUTHOR

...view details