தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுக அரசின் சமூக அநீதிக்கு நாளையுடன் வயது 900 நாட்கள்'; ராமதாஸ் காட்டம் - ramadoss on vanniyar quota - RAMADOSS ON VANNIYAR QUOTA

இடஒதுக்கீடு விஷயத்தில் இன்னுயிரை ஈந்தால் தான் வன்னிய மக்களுக்கு சமூகநீதி சாத்தியமாகும் என்றால் அதற்கும் தயாராகவே இருக்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், அறிவாலயம் (கோப்புப்படம்)
பாமக நிறுவனர் ராமதாஸ், அறிவாலயம் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2024, 5:46 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, நாளையுடன் (செப்., 17) 900 நாட்கள் ஆகும் நிலையில், சமூக அநீதிக் கூடாரமாகத் திகழும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அந்தத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; எம்பிசி-க்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு போதிய பயன் கிடைக்கவில்லை என்று 31 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நாம், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் நமக்கென தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி கடந்த 2020ம் ஆண்டில் மிகப்பெரிய சமூக நீதி போராட்டங்களை முன்னெடுத்தோம். அதன் பயனாகவே முந்தைய ஆட்சியில், வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், அதை எதிர்த்து நாம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் நாள் தீர்ப்பளித்தது. அதன்பின் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 3 முறை முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார். கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான மூத்த நிர்வாகிகளும் கட்சித் தலைமையின் பிரதிநிதிகளாக அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் குறைந்தது 50 முறையாவது சந்தித்து பேசியிருப்பார்கள். அவர்களிடமும் இதே கருத்தைத் தான் தமிழக அரசு தெரிவித்தது.

இதையும் படிங்க:கோடை காலம் முடிந்த பின்னரும் தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக இருக்க இதுதான் காரணமா?

ஆனால், திடீரென ஒரு நாள் நாங்களாக இட ஒதுக்கீடு வழங்க முடியாது; மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார் என்றால், அதன் பொருள், உழைக்கும் பாட்டாளி மக்களை திமுக அரசு நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டது என்பது தானே?

இத்தகைய துரோகங்களும், கழுத்தறுப்புகளும் நமக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களில் இத்தகைய சதிகளையெல்லாம் கடந்து தான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 1987ம் ஆண்டு பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாளில் தொடங்கி ஒரு வாரத்திற்கு தொடர் சாலைமறியல் போராட்டத்தை அறிவித்திருந்தோம். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், மிகக் கொடிய தாக்குதல்களிலும் நமது பாட்டாளி சொந்தங்கள் 21 பேர் விலைமதிப்பற்ற இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் அவர்களின் 37-ஆம் ஆண்டு நினைவு நாளில் போற்றுவதுடன், எனது வீர வணக்கங்களையும் செலுத்துகிறேன்.

அவர்கள் எந்த நோக்கத்திற்காக தங்களின் இன்னுயிரை ஈந்தார்களோ, அந்த நோக்கம் இன்று வரை நிறைவேறவில்லை. உழைப்பையும், வழி நடத்தலையும் கடந்து, இன்னுயிரை ஈந்தால் தான் வன்னிய மக்களுக்கு சமூகநீதி சாத்தியமாகும் என்றால் அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன். எப்படியிருந்தாலும் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்காமல் இந்த ராமதாசு ஓய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்'' என இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details