மதுவிலக்கு தான் மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும் என்பதை பீகார் மாநிலத்திடமிருந்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பீகாரில் முழு மதுவிலக்கு:இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்ப வன்முறைகள் தொடர்பான 21 லட்சம் வழக்குகள் தவிர்ப்பு, 18 லட்சம் இளைஞர்கள் உடல் பருமன் குறைபாட்டுக்கு ஆளாவது தவிர்ப்பு, பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறைவு, ஆண்களின் மது குடிக்கும் அளவு பெருமளவில் குறைவு உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் ஒற்றை ஆணையால் சாத்தியமாகியுள்ளன. பீகாரில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று 2016-ஆம் ஆண்டில் பீகார் அரசு பிறப்பித்த அரசாணை தான் மேற்கண்ட அனைத்து நன்மைகளுக்கும் காரணமான ஒற்றை ஆணையாகும்.
''லான்செட்'' இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக்கட்டுரையில் இந்த புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. உலகப்புகழ் பெற்ற ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழுவினர் இணைந்து, பிகாரில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட நன்மைகள் குறித்து ஆய்வு செய்து இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர். இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருக்க, பீகாரில் மதுவிலக்கு நடைமுறப்படுத்தப்பட்டு இருப்பதால் அங்கு அமைதி, மன நிம்மதி, மது சார்ந்த நோய்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து மக்கள் விடுபட்டிருப்பதை பார்க்க முடிகிறது.
உயிரிழப்புகள் தவிர்ப்பு: லான்செட் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் இடம் பெற்றுள்ள புள்ளி விவரங்களைக் கடந்து, மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய மேலும் பல உண்மைகளும் உள்ளன. பீகார் மாநிலத்தின் மக்கள்தொகை, 2016-ஆம் ஆண்டுக்கு முன்பாக அங்கு விற்பனையான மதுவின் அளவு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது கடந்த 8 ஆண்டுகளில் மதுவால் நிகழ்ந்திருக்க வேண்டிய 8 லட்சம் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. பீகார் மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. இவை நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகள் ஆகும்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பும் போதெல்லாம் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், கள்ளச்சாராயம் பெருகி விடும், அரசின் வருவாய் குறைந்து விடும் என்றெல்லாம் தமிழக ஆட்சியாளர்களால் பூச்சாண்டி காட்டப்படுகிறது. பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் அங்கு கள்ளச்சாராயமும் பெருகவில்லை, அம்மாநில அரசின் வருமானமும் குறையவில்லை என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.