சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி சார்பில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உரிய காலத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்த ஆளுநர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதன்படி, கடந்த 2023ஆன் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடப்பாண்டு ஜூலை 31 வரை 20க்கு 18 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கம் நடத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான முயற்சிகளை எடுக்குமாறு பல்கலையின் நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வரும் பல்கலை ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் 31ஆம் தேதிக்குள் 10 பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் காலதாமதமின்றி தங்கள் பட்டங்களைப் பெற இயலும்.
தேசிய தகுதித் தேர்வு எனப்படும் நெட் மற்றும் ஜேஆர்எப் எழுதும் முதுகலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலைகளயும், உத்வேகத்தையும் பல்கலை துணைவேந்தர்கள் அளிக்க வேண்டும். இதன் மூலம் அம்மாணவர்கள் புகழ் பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணிகளில் சேர முடியும்.