புதுடெல்லி:இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரா திசநாயகேவிடம் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய விரைவான தீர்வு கிடைக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துக் கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். மீனவர்களை விடுவிக்க இந்தியா உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இது குறித்து ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், "இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி நான் எழுதிய கடிதத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எனக்கு பதில் அளித்திருந்தது. மீனவர்கள் விடுவிக்கும் விவகாரத்தில் இருநாடுகளின் அரசுகளுக்கு இடையே முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க:இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் பலனளிக்கும் வகையில் சந்திப்பு...இலங்கை அதிபரின் எக்ஸ் பதிவு!
இலங்கை அதிபராக பதவி ஏற்றுள்ள அனுரா குமார திசநாயகே முதன் முறையாக இந்தியா வந்திருக்கிறார். எனவே, இந்த விவகாரத்தை அவரின் கவனத்துக்கு எடுத்து சென்று, தெரியாமல் சர்வதேச எல்லையை கடந்து மீன்பிடித்த மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளுக்கு இலங்கை அரசு அதிக அபராதம் விதித்திருக்கிறது. அபராதத்தை தள்ளுபடி செய்து படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள இருநாடுகளுக்கு இடையேயான விவகாரங்களில் தீர்வு காண்பதற்கு இணை பணிக்குழு போன்ற அரசுகளுக்கு இடையேயான தளத்தை பயன்படுத்தி இலங்கை அரசுடன் தொடர்ந்து சந்திப்புகள் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன், அண்மையில் நாடாளுமன்றத்தில் அளித்த தகவலின்படி 45பேர் விசாரணைக் கைதிகளாகவும்,96 பேர் தண்டனை கைதிகளாகவும் என மொத்தம் 141 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளதாக கூறப்பட்டிருந்தது. மேலும் இலங்கையின் வசம் 198 படகுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.