திருநெல்வேலி:நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. குறிப்பாகத் தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகின்றன.
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால் இரு கட்சிகளுக்கு இடையே இன்னும் சுமுக உடன்பாடு எட்டப்படாததால் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இருப்பினும் இன்னும் ஒரு சில தினங்களில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.
இதற்கு முன்னதாக அனைத்து மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் நாடாளுமன்றத் தேர்தலில் களப்பணியாற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை. அந்த வகையில் திருநெல்வேலி கிழக்கு மாநகர் மற்றும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் செங்குளம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மேலும் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபி மனோகரன், பழனி நாடார் உள்படப் பல முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.