தூத்துக்குடி: வேம்பார் அருகே உள்ள கடற்கரைப் பகுதிகளிலிருந்து சட்ட விரோதமாக பல்வேறு பொருட்கள் கடத்திச் செல்லப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து க்யூ பிரிவு போலீசார் வேம்பார் கடற்கரைப் பகுதிகளில் இன்று அதிகாலையிலிருந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சந்தேகத்திற்கிடமாக கடல் கரையை விட்டுக் கிளம்ப இருந்த நிரோன் நாட்டுப் படகை கண்காணித்த க்யூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் மற்றும் க்யூ பரிவு போலீசார் படகைச் சுற்றி வளைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த படகில் 30 கிலோ எடை கொண்ட 84 மூட்டைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 520 கிலோ எடை கொண்ட 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலைகள் இருந்ததை கண்டறிந்த க்யூ பிரிவு போலீசார் பீடி இலை மூட்டைகளை கைப்பற்றினர். மேலும் அது சம்பந்தமாக சிலுவைப் பட்டியைச் சேர்ந்த கெனிஷ்டன் (வயது 29), பொன்சிஸ் ராஜா (37), பனிமய கார்வின் (19), மாதவன் (21) ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் இலங்கைக்கு சட்ட விரோதமாக கடத்தப்பட இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:மாட்டுத் தீவனத்தில் விஷம் கலந்த மர்ம நபர்.. 5 மாடுகள் உயிரிழப்பு!