சேலம்:புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அரசு உயர் பதவிகளில் ஒரு பணி கூட இந்த அரசு அருந்ததியர் மக்களுக்கு வழங்காமல் அநீதியை செய்து வருகிறது. எனவே, அரசுப் பணிகளில் அருந்ததியருக்கு முன்னுரிமை என்ற அடிப்படை கோரிக்கையை வைத்து பேரணி நடத்த உள்ளோம்.
இட ஒதுக்கீட்டில் முன்னோடி என சொல்லிக்கொள்ளும் திமுக தன்னை, 'திராவிட மாடல் அரசு' என சொல்லி கொள்வதில் உண்மை இல்லை. இதற்கு முன் ஆட்சியில் இருந்தபோது கூட, இட ஒதுக்கீடு விவகாரத்தில் உண்மை, நேர்மை, வெளிப்படையாக திமுக நடந்து கொள்ளவில்லை. 3 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், எப்பொழுதெல்லாம் ஒரு பணியிடம், இரண்டு பணியிடம் காலியாகுமோ அது அனைத்தையும் ஆதிதிராவிடர்களுக்கே வழங்கி, அருந்ததியர் மக்களை நிர்க்கதியாக்குகிறார்கள்.
அரசின் அனைத்து துறைகளிலும் உயர் பதவியில், உரிய இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. உள் ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட ஒரு பிரிவுக்கு மட்டும் அரசு முன்னுரிமை அளித்துள்ளது. சந்தர்ப்பத்துக்கு ஏற்ப திமுகவினர் பேசுவர். தேசிய கல்விக் கொள்கையை நிறைவேற்றுவதில் மாநில அரசு தயக்கம் காட்டுவது ஏன்? என தெரியவில்லை. மதுவிலக்குக்கு தேசியத்தை தேடும் திமுக கல்விக்கு தேடக்கூடாதா? மாநில அரசுக்கு நிதி வேண்டுமானால் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டும்.
இதையும் படிங்க:பாஜகவின் பொய்களை உடைத்தெறிய ஏராளமான திருச்சி சிவாக்கள் தேவை: புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்