புதுக்கோட்டை:புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு போட்டியை பிரான்ஸ் நாட்டுக்காரர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். பார்வையாளர்கள் மேடையில் இருந்து விறுவிறுப்பு குறையாத ஜல்லிக்கட்டு போட்டியை பிரான்ஸ் நாட்டுக்காரர்கள் பார்வையிட்டு தங்களது செல்போனில் படம் பிடித்துக் கொண்டனர்.
தமிழ்நாட்டிலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாகவும், அதிக வாடிவாசல்களை கொண்ட மாவட்டமாகவும் புதுக்கோட்டை மாவட்டம் இருந்து வருகிறது. அந்த வகையில், ஜனவரி 4ஆம் தேதி தமிழ்நாட்டின் 2025ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியிலும், அதனைத் தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வன்னியன்விடுதியிலும், குளத்தூர் அருகே உள்ள மங்கத்தேவன்பட்டியிலும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, நேற்று (ஜனவரி.17) புதுக்கோட்டை அருகே உள்ள வடமலாப்பூர், ராஜாபட்டி, குறுக்களையாபட்டி ஆகிய மூன்று ஊர் கிராம பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் தைப்பொங்கலை முன்னிட்டு நடைபெறும் வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கப்பட்டது.
பிரெஞ்சு நாட்டுகாரர் பேட்டி (ETV Bharat Tamil Nadu) இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:"ராணிப்பேட்டை இளைஞர் விவகாரத்திற்கும், விசிகவுக்கும் தொடர்பில்லை"- திருமாவளவன் பதில்!
மேலும் இந்த போட்டியை கண்டுகளிக்க பிரான்ஸ் நாட்டுக்காரர்கள் வருகை தந்தனர். பார்வையாளர்கள் மேடையில் இருந்து விறுவிறுப்பு குறையாத ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்டு தங்களது செல்போனில் படம் பிடித்துக் கொண்டனர். இது குறித்து பேசிய பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சமர் யாதவ், “நாங்கள் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து 2 நாட்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளோம். இங்கு தமிழக மக்கள் எங்களுக்கு அன்புடன் வரவேற்பு அளிக்கின்றனர். ஜல்லிக்கட்டை பார்த்ததில் மிக மகிழ்ச்சி" சமர் யாதவ்.
ஜல்லிக்கட்டு போட்டியின் தொகத்தில் வடமலாப்பூர் கருப்பர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் காளை, நார்த்தாமலை கோயில் காளைகள், வடசேரிபட்டி கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் காளைகளை அவிழ்த்து விடப்பட்டது. இந்த போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800 காளைகள் களமிறங்கினர். மேலும் 300 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கு பெற்றனர்.
சீறிவரும் காளைகளை வீர தீரத்துடன் காளையர்கள் அடக்கி பரிசுகளை பெற்று சென்றனர். வீரர்களின் பிடியில் சிக்காமல் செல்லும் காளையர்களின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளாக குக்கர், மிக்ஸி, கட்டில், சைக்கிள், வெள்ளி காசு, ரொக்கம் பணம் ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டது.