தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே அய்யாவாடியை அடுத்துள்ள செம்பியவரம்பல் கிராமத்தில், 64 பைரவ வடிவங்களில் ஒன்றான சொர்ணாகர்ஷண பைரவர், நான்கு கரங்களுடன் பைரவியை தனது இடது தொடையில் அமர்த்தியபடி வலது கையில் சொர்ண கலசம் ஏந்திய படியும், இடது கையில் திரிசூலம் ஏந்தியும் அருள் பாலிக்கிறார்.
இவர் செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கும், லட்சுமிக்கும் செல்வத்தினை வாரி வழங்கும் வள்ளலாய் விளங்குபவர். இவரை வளர்பிறை மற்றும் தேய்பிறை என எட்டு அஷ்டமி தினங்களில் அரளி மலர் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் பண கஷ்டங்கள், பில்லி, சூனியம், ஏவல், திருமணத்தடை, குழந்தையின்மை, நவக்கிரக தோஷங்கள் போன்ற தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், பௌர்ணமி, அமாவாசை தினங்கள் மற்றும் திருவாதிரை, பூசம், உத்திரம் நட்சத்திர தினங்களில் வழிபடுவதன் மூலம் சகல விதமான கஷ்டங்களும், காரியத்தடைகளும் நீங்கப்பெறும் என்பது ஐதீகம்.