புதுச்சேரி:கடந்த 4 நாட்களாக ஃப்பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தொடர் கனமழை பெய்து வந்தது. இதில் அதிகபட்ச மழையாக தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 50 செ.மீ மழை பதிவாகி நிலையில் புதுச்சேரியில் 48.4 செமீ மழை பதிவாகியுள்ளது.
புதுச்சேரியில் இது வரை பெய்த மழைகளில் இதுவே அதிக அளவிலான மழைப் பொழிவாகும். இதற்கு முன், கடந்த 2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21சென்டிமீட்டர் மழை பதிவாகியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, “ ஃபெஞ்சல் புயல் காரணமாக மழை குறித்து பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இது வரை 551 நபர்கள் தங்க வைக்கப்பட்டு 85,000 உணவு பொட்டலகள் வழங்கப்பட்டுள்ளன. மீட்பு பணிக்காக 12 பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மீட்பு பணிக்காக 70 ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
4,000 ஊழியர்கள் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் பேரிடர் மீட்பு குழு 55 பேர் கொண்ட 2 குழுக்களாக தீவிர மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். அதில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2 பேரை காணவில்லை. உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். நமது அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"பல்லடம் அருகே மூவர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்"- கொல்லப்பட்ட செந்தில்குமார் மனைவி கோரிக்கை!