திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் அடுத்த அலவந்தான்குளம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பள்ளிக்கோட்டை, நெல்லை திருத்து உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுவாக இருந்த ஒரு கிணற்றிலிருந்து, ஒரே பைப்லைன் மூலம் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அலவந்தான்குளம் கிராமத்தில் மக்கள்தொகை அதிகரித்ததன் காரணமாக, தனி மோட்டார் பொருத்தி, தனி பைப்லைன் அமைக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வந்தது. ஒரே வேளையில் 3 கிராமங்களுக்கும் தண்ணீர் சென்று கொண்டிருந்த சூழலை மாற்றியதால், புதிய பைப்லைன் அமைக்க பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், புதிய பைப்லைன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். புதிய பைப்லைன் அமைக்க வேண்டும் எனக் கோரி அலவந்தான்குளம் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி புதிய பைப்லைன் அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை திருத்து மற்றும் பள்ளிக்கோட்டை கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதனையறிந்த போலீசார், அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மானூர் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், புதிய பைப்லைன் அமைக்கக் கூடாது என, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.