மேலவலவு ஊரணியை மீட்க தேவதானப்பட்டி பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை தேனி:பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில், 3 ஏக்கர் பரப்பளவில் மேலவளவு ஊரணி என்று 25 ஆண்டுகளுக்கு முன்பு ஊரணி இருந்து வந்துள்ளது. இந்த ஊரணியில் மழைக் காலங்களில் நீர் நிறைவதால், தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காமலிருந்து வந்துள்ளது.
இந்நிலையில், தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் கடந்த 25 ஆண்டுகளாகப் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊரணியில் கொட்டி, ஊரணியைக் குப்பை மேடாக மாற்றியதால், தற்போது சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்களாக மாறி, ஊரணி முற்றிலுமாக அளிக்கப்பட்டுவிட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால், பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகள் முழுவதும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பேரூராட்சி நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாகக் குப்பை மேடாக இருக்கும் ஊரணியில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி, மீண்டும் ஊரணியை உருவாக்கக் கோரிக்கை விடுத்தும், பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், குடியிருப்புப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை மீட்டு உருவாக்கம் செய்ய, ஊரணியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றி மீண்டும் ஊரணியை உருவாக்கி நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது. இப்பிரச்சனை குறித்து தேவதானப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர்களின் கேட்ட நிலையில், நில அளவீடு செய்து மீண்டும் அதே பகுதியில் ஊரணியை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பாமக, விசிகவினர் மோதல்; திண்டிவனம் மயான கொள்ளை ஊர்வலத்தில் பதற்றம்.. போலீசார் தடியடி