அரியலூர்:ஜெயங்கொண்டம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக இளம்பருதி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அலுவலகத்தில் வேலை நேரத்தில் குடிபோதையில் இருப்பதால் பத்திரப்பதிவுகள் தாமதமாக நடப்பதாக இவர் மீது மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், ஜெயங்கொண்டம் அருகே கரடிகுளம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவர் தனது குடும்ப சொத்துகளை உடன் பிறந்தவர்களுக்கு சமமாக பிரித்து கொடுப்பதற்காக, நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்துள்ளார். மாலை 5 மணி வரை காத்திருந்த விவசாயி நடராஜன், தாம் எழுதிய பத்திரத்தை சார்பதிவாளரிடம் கொடுத்துள்ளார்.
அப்போது, மது போதையில் இருந்ததாக கூறப்படும் சார்பதிவாளர், அதை வாங்கி படிக்காமலேயே பத்திரத்தில் தவறு உள்ளதாகக் கூறி, விவசாயி நடராஜனை வெளியே செல்லுங்கள் என கூறியதாகத் தெரிகிறது. நீண்ட நேரம் காத்திருந்த நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்து, சார்பதிவாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். அப்போது, அங்கிருந்த உறவினர்கள் இது தொடர்புடைய மேலதிகாரியிடம் தெரிவித்து சார்பதிவாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனக்கூறி அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:அண்ணனும், தம்பியும் சேரக்கூடாதா? 2026 தேர்தல் கூட்டணிக்கு வெயிட்டிங்.. சீமான் அதிரடி பதில்! - Seeman About Vijay