தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாடாளுமன்ற தேர்தல் 2024: கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் செய்ததும்.. செய்யத் தவறியதும்..! - பாமக அசோக் ஸ்ரீநிதி

Coimbatore MP PR Natarajan: கோவை எம்பி நடராஜனைப் பார்ப்பதே அரிது என எதிர்க்கட்சிகளும், தொழில்துறை நலனுக்கான இறங்கிப் போராடி இருக்கலாம் என தொழில்துறையினரும் வைக்கும் கருத்துகள் குறித்தும், கோவை தொகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினராக பி.ஆர்.நடராஜன் என்ன செய்துள்ளார் என்பதையும் ஈடிவி பாரத் தமிழ்நாட்டின் உங்க எம்.பி. செய்ததும் செய்யத் தவறியதும் தொகுப்பில் காணலாம்..

Coimbatore MP PR Natarajan seithathum seiya thavariyathum
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 5:00 PM IST

கோவை எம்.பி. நடராஜன் செய்ததும் செய்யத் தவறியதும்

கோயம்புத்தூர்:தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோயம்புத்தூர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மையமாக விளங்குகிறது. இங்கு, நூற்பாலைகள், இயந்திர உபகரணங்கள், கிரைண்டர், பம்ப் மோட்டார் போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் மட்டுமின்றி சென்னைக்கு அடுத்தபடியாக அதிகளவில் மென்பொருள் நிறுவனங்களும் நிறைந்துள்ளன.

இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்துவரும் மக்களுக்கும் தொழில்துறை வேலைவாய்ப்பு வழங்கும் இடமாக கோயம்புத்தூர் உள்ளது. தொழில்துறை மட்டுமின்றி விவசாயமும் அதிகளவில் நடைபெறும் கோயம்புத்தூர், இயற்கை வளங்களையும் அதிகளவில் கொண்டுள்ளது. கோணியம்மன், மாசாணியம்மன், மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர் எனப் பல புகழ்பெற்ற ஆன்மிக தலங்களையும், பல்வேறு சுற்றுலாத் தலங்களையும் கோவை தன்னகத்தே கொண்டுள்ளது.

தொகுதி நிலவரம்: தமிழகத்தின் 20வது நாடாளுமன்றத் தொகுதியான கோயம்புத்தூர் தொகுதியில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடக்கியது. இதில் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர் ஆகிய தொகுதிகள் மாநகர பகுதிகளையும், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய தொகுதிகள் புறநகர்ப் பகுதிகளையும் உள்ளடக்கியது.

கோவை சந்திப்பு ரயில் நிலையம்

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் 20 லட்சத்து 83 ஆயிரத்து 34 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 10 லட்சத்து 30 ஆயிரத்து 63 பேர் ஆண்கள், 10 லட்சத்து 52 ஆயிரத்து 602 பேர் பெண்கள், 369 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். வாக்காளர் அடிப்படையில் 23 லட்சத்து 58 ஆயிரத்து 526 வாக்காளர்களுடன் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகக் கோவை நாடாளுமன்றத் தொகுதி உள்ளது.

சென்னைக்கு அடுத்த படியாக அதிகளவிலான தொழில் வளம், கல்வி நிறுவனங்களை உள்ளடக்கியதால் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகக் கருதப்படுகிறது. இந்த தொகுதியில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

அதன் காரணமாகத் தேசிய கட்சிகளே இந்த தொகுதியை அதிகமாக வென்றுள்ளன. கோவை தொகுதியைக் காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் கைப்பற்றியுள்ளன.

பாரம்பரிய கம்யூனிஸ்ட்: தற்போது கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜன் பதவி வகித்து வருகிறார். இவர் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை விட 1 லட்சத்து 79 ஆயிரத்து 143 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மேலும், நாட்டிலேயே பாஜக வேட்பாளரை எதிர்த்து மாபெரும் வெற்றி பெற்ற ஒரே கம்யூனிஸ்ட் வேட்பாளர் என்னும் சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

முழுநேர அரசியல்வாதியான நடராஜனின் மனைவி ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் என்பதைத் தவிர பெரிய பின்னணி இல்லாத நடராஜன், கட்சி அலுவலகத்தில் மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது இவரால் முடிந்த நடவடிக்கையை எடுப்பதாகவும், மக்களின் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் தொழிலாளர்கள் நலனுக்கு, தொழில்துறை வளர்ச்சிக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார் எனத் தொகுதி மக்கள் கருதினர். ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நடராஜன் மும்முரமாக களப்பணி ஆற்றவில்லை என தொழில்துறையினர் கூறுகின்றனர்.

மருதமலை முருகன் கோயில்

பார்லிமெண்ட் பெர்பாமென்ஸ்:நாடாளுமன்ற பங்கெடுப்பில் 86 சதவீதம் வருகைப்பதிவு கொண்டுள்ள பி.ஆர்.நடராஜன், 56 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார், 253 கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், அவர் தனிநபர் மசோதா எதுவும் கொண்டுவரவில்லை.

அரிதாகவே அமைச்சர்களைப் பார்க்க வருகிறார்: எம்.பி. நடராஜனின் செயல்பாடு குறித்துப் பேசிய கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், "கோவை நாடாளுமன்றத் தொகுதி தொழில்கள் அதிகமாக நிறைந்திருக்கக் கூடிய தொகுதி. பல்வேறு விதமான கல்வி நிலையங்கள், மோட்டார் பம்ப் தொழிற்சாலை, கிரைண்டர் தொழிற்சாலைகள், நூற்பாலைகள் எனத் தொழில்கள் அதிகம் நிறைந்த நாடாளுமன்றத் தொகுதி. இங்கு இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் கொள்கை முடிவுகள் எடுப்பதில் அரசுக்கு உதவி செய்யக் கூடியவராக, அல்லது களத்தில் இறங்கி மக்களின் கோரிக்கைகளைத் தகுந்த விதத்தில் எடுத்துக் கூறுபவராக இருக்க வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாகக் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மிக அரிதாகவே பொதுமக்களுக்குக் காட்சி அளிக்கிறார். அதுமட்டுமல்ல இங்கு இருக்கக்கூடிய ரயில்வே பிரச்சனை, விமான நிலைய விரிவாக்கம் சம்பந்தமாக எல்லாம் நாங்கள் பலமுறை அமைச்சர்களை எல்லாம் சந்தித்து, அவர்களை எல்லாம் இங்கேயே கூட வரவழைத்துப் பேசுகிறோம். ஆனால் அப்போது கூட அவர் அரிதாகவே அமைச்சர்களைப் பார்க்க வருகிறார். நடைபெற்றுக் கொண்டிருப்பது மத்தியிலே பாஜக ஆட்சி, எதிர்க்கட்சியிலே அதுவும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்பி எந்த அளவிற்குப் பெரிதாக தன்னுடைய குரலை இந்த மக்களுக்காக எழுப்பினார் என்பது சந்தேகமாகத் தான் உள்ளது" என்றார்.

கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகம்

சூயஸ் திட்டத்தைத் தடுக்கவில்லை: பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கூறுகையில், "எம்.பியின் செயல்பாடு திருப்திகரமானதாக இல்லை. தேர்தலில் அவர் முக்கிய வாக்குறுதியாக அளித்ததே சூயஸ் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்பது தான். 24 மணி நேரம் தண்ணீர் வழங்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் இது. அந்த சூயஸ் வெளிநாட்டு நிறுவனம் அதை நாங்கள் தடை செய்வோம் என்றார்கள்.

அதிமுக ஆட்சியின் போது திமுக, கம்யூனிஸ்ட் எல்லோரும் இதை எதிர்த்துப் போராடினார்கள். தேர்தலுக்கு முன்னர் கட்டாயம் சூயஸ் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்றார்கள். தேர்தலில் ஜெயித்து வந்த பின்னர் அந்தர் பல்டி அடித்து சூயஸ் உடன் வேலை செய்வோம் என இன்றும் சூயஸ் நடந்து கொண்டுதான் உள்ளது. அதை வியோல்யா என்னும் நிறுவனம் வாங்கி விட்டது. நாங்கள் தொடர்ந்து அதை எதிர்த்து வருகின்றோம்.

சூயஸ் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை, மூன்றாம் நபர் வைத்து தான் பணிகளை மேற்கொள்கின்றனர். அந்த மூன்றாம் நபர்கள் எல்லாம் இந்தியர்கள் தான், தமிழர்கள் தான். பின்னர் ஏன் நாமே அதைச் செய்யக் கூடாது. ஒரு நிறுவனத்திற்கு ஏன் நாம் 3 ஆயிரம் கோடி கொடுக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கேள்வி.

அதேபோல் தடாகத்தில் கனிம வளக் கொள்ளை நடக்கும் போது, குறிப்பாக மண் கொள்ளைக்கு ஆதரவாக இருப்பது போலப் பேசினார். அதற்கு பின்னர் பின்வாங்கினார். கோயம்புத்தூரில் கனிமவள கொள்ளை அதிகளவில் நடக்கிறது, அதைத்தடுக்க அவர் ஏதும் செய்யவில்லை. நொய்யல் ஆற்றிலும், ஏரிகளிலும் கழிவுகள் கலக்கிறது இதைத் தடுக்கவும் அவர் எதுவும் செய்யவில்லை. எம்பியாக இருந்த 5 ஆண்டுகளில் அவர் என்ன செய்தார் என்கின்ற நிலை தான் உள்ளது” என்றார்.

உக்கடம் ஏரி

தொழில்துறைக்குக் குரல் கொடுத்திருக்கலாம்:கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (COTMA) தலைவர் சிவக்குமார் கூறுகையில், "2017ஆம் ஆண்டு மத்திய அரசு ஜிஎஸ்டியை அமல்படுத்தியபோது ஜாப் ஒர்க்கிற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்தார்கள். ஜிஎஸ்டியை குறைக்கக்கோரி அன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கோரிக்கை விடுத்தோம். இந்த ஜிஎஸ்டியால் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டிய நிலையும் உருவானது. மேலும், பல நிறுவனங்கள் மூடும் நிலை கூட உருவானது.

தமிழ்நாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிக்கை கூட தெரிவிக்கிறது. இதற்காகவாவது ஜிஎஸ்டி சதவீதத்தைக் குறைக்க வேண்டும். ஜிஎஸ்டி குறைப்பதால் பொதுமக்களும் பயனடைவர், தொழில்துறையும் பயனடையும். நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடமும் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தோம். அவரும் எங்கள் கோரிக்கையை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் சென்றார். அவர் இன்னமும் இந்த தொழில்துறைக்காகக் குரல் கொடுத்திருந்திருக்கலாம்” என்றார்.

ஜவுளித் தொழில் பாதிப்பு: தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் சங்கத் துணைத் தலைவர் சுருளிவேல் கூறுகையில், "தொகுதி எம்.பி நடராஜனிடம் நாம் கொடுக்கும் மனுக்களைச் சம்பந்தப்பட்ட இலாக்காக்களுக்கு அனுப்பி, அவர்கள் அளிக்கும் பதிலை நமக்கு அனுப்புவார். அதனால் எதாவது தீர்வு கிடைத்ததா என்றால் அது குறைவு தான். ஜிஎஸ்டியை 12 சதவீதமாக்கியதாகக் கூறுகிறார், அரசே அதிக ரீபண்ட் வருவதால் தான் 12 சதவீதமாகக் குறைத்தார்கள். நாங்கள் 5 சதவீதம் தான் கேட்கிறோம், அதற்கு இன்னும் போராடி இருக்கலாம்.

டெக்ஸ்டைல் மில்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் போன்ற மற்ற மாநிலங்களில் டெக்ஸ்டைல் மில்கள் அதிகம் வந்துவிட்டது. அங்கெல்லாம் அதிகம் சலுகைகள் கொடுக்கிறார்கள். இன்னும் 5 ஆண்டுகளில் திருப்பூரே இருக்காது என்கிற அளவில் அங்கு வளர்ச்சி அடைந்து விட்டது. இப்படியே சென்றால் வேலைக்கு ஆட்களும் கிடைக்காது, தொழிலும் நடக்காமல் போய்விடும். இனியாவது அரசு விழித்துக்கொண்டு ஆதரவளிக்க வேண்டும். மாநில அரசும், மத்திய அரசும் தொழிலை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அவரால் முடிந்தவற்றை செய்துள்ளார்: சிறு வியாபாரி அப்துல் பாரி கூறுகையில், "ரயில்வே திட்டங்கள் செய்து கொடுத்துள்ளார். பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டட வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார். பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளில் அவரால் முடிந்தவற்றை நாடாளுமன்றத்தில் எழுப்பி நிறைவேற்றித் தந்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்

வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன்: நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "தேர்தல் காலத்தில் மக்களைச் சந்தித்த போது கோவையின் அமைதி பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்திருந்தோம். இன்று கோவையின் அமைதி பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று பெருமையோடு நான் தெரிவிக்கிறேன். மிக மோசமான மதவெறி அரசுக்கு மத்தியில், ஒரு அமைதிக்கான வேட்பாளராக என்னைப் பார்த்து என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றியாக இந்த மாவட்டத்தினுடைய அமைதி பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசாங்கம் இரண்டாவது முறையாக மோடி தலைமையில் அமைந்த பிறகு தென் மாநிலங்களை வஞ்சிப்பது, பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களைப் பொருளாதார ரீதியில் தண்டிப்பது என்ற முறையிலே செயல்பட்டு வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கக்கூடிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை முடக்கும் விதமாக ஜாப் ஆர்டர்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தி இருந்தார்கள்.

எங்களுடைய கோரிக்கை ஜாப் ஆர்டருக்கு ஜிஎஸ்டி கூடாது என்பது தான். முழுமைப்படுத்தப்பட்ட பொருளுக்கு ஜிஎஸ்டி என்பது வேறு, ஜாய் ஆர்டருக்கு ஜிஎஸ்டி என்பது அந்த தொழிலை முடக்குவது போல எனக்கூறித் தொடர்ந்து போராடினோம். அதனால் ஜாப் ஆர்டருக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. ஆனாலும் ஜாப் ஆர்டருக்கு ஜிஎஸ்டி ரத்து செய்ய வேண்டும் எனக்கூறித் தொடர்ந்து போராடி வருகிறோம்” என்றார்.

களம் காண காத்திருப்பவர்கள்: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் கோவை தொகுதியை வழக்கம் போல, திமுக அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிக்குக் கொடுக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், மீண்டும் இத்தொகுதியைப் பெறுவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. அப்படி சீட் தங்களுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில், பி.ஆர்.நடராஜன் இருமுறை பதவி வகித்து விட்டதால் கட்சி விதிப்படி வேறு நபரை நிறுத்த பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக: கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் கோவை தெற்கு தவிர்த்து ஏனைய தொகுதிகளில் அதிமுக உறுப்பினர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுகவின் வலுவான தொகுதியாகக் காணப்படும் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்களைக் களமிறக்கவே அதிக வாய்ப்புள்ளது. நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளருமான சந்திரசேகர், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த கல்யாணசுந்தரம் ஆகியோரில் ஒருவருக்குப் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம்: கோவையில் தங்களுக்குக் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளதால், சட்டமன்ற தேர்தலில் நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த மக்கள் நீதி மய்யம் கட்சியும் கோவையில் போட்டியிட விரும்புவதாகக் கூறப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் கடந்த தேர்தல்களில் தனித்து களம் கண்ட நிலையில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலின் போது காங்கிரஸ் வேட்பாளருக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியுடன் கரம் கோர்த்து கோவை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், வெற்றிபெற்ற தொகுதியை விட்டுவிடக் கூடாது என மார்சிஸ்ட் கட்சியினரும் உறுதியாக உள்ளதாகத் தொகுதியில் பேச்சு நிலவுகிறது.

பாஜக: கோவையை பாஜக முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகப் பார்ப்பதால் சீட் பெற பலமுனை போட்டி நிலவுகிறது. அதனால் மக்களிடம் பிரபலமாக உள்ள ஒருவருக்கே போட்டியிட வாய்ப்பு வழங்கும் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் கோவை நாடாளுமன்றத் தொகுதியான பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் தேர்தலில் போட்டியிட அண்ணாமலை விரும்பவில்லை எனில், ஏ.பி.முருகானந்தத்திற்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அதேவேளையில் தெற்கு தொகுதி சட்டமன்றத் தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்து வெற்றிபெற்ற வானதி சீனிவாசனும் தேசிய அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாலும், கமல்ஹாசன் போட்டியிட்டால் மீண்டும் தோற்கடித்து தனது செல்வாக்கைக் காட்ட விரும்புவதாலும் அவரும் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், கோவை தொகுதி கோதாவில் நாம் தமிழர் கட்சியும் தனித்து களம் காண உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தடுக்கி விழுந்தால் மீட்க கூட ஆளில்லை.. வெள்ளியங்கிரி மலை ஏற்றத்தில் தவிக்கும் பக்தர்கள்!

ABOUT THE AUTHOR

...view details