பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளிகள்! தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி பேருந்து நிலையம் அருகே, அனைத்து அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கம், அனைத்துத் தொழில் சங்கங்கள் மற்றும் அனைத்துச் சமுதாயத்தினர் சார்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று (பிப்.19) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள், சிவகிரி பகுதிகளில் இயங்கி வரும் நாட்டுச் செங்கல் சூளைகள் மீதான தடையை ரத்து செய்து மீண்டும் செயல்பட அனுமதி கோரியும், புதியதாக அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டியும், வாசுதேவநல்லூரில் உள்ள சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டியும், கோசங்களை எழுப்பிய படி பேரணியாகச் சென்றனர்.
மேலும், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டியும், குறிப்பாக சிவகிரி தாலுகாவில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க வலியுறுத்தியும் அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களைத் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க:"சாலையோர வியாபாரிகள் அனைவரையும் உழவர் சந்தைக்கு மாற்ற வேண்டும்" - உழவர் சந்தை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
அதன் பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் சிவகிரி தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்றனர். அப்போது செங்கல் உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "பசுமை தீர்ப்பாணையத்தின் வழிகாட்டலின் படி, எங்கள் பகுதியில் இயங்கி வந்த நாட்டுச் செங்கல் சூளைகளை நடத்த தடைவிதித்துள்ளனர்.
இதனால், நேரடியாக 2 ஆயிரம் பேரும், மறைமுகமாகவும் சுமார் 6 ஆயிரம் பேர் எனக் கிட்டத்தட்ட 8 ஆயிரம் தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சிகளில் எங்கள் தொழிலுக்கு பிரச்சனைகள் எதுவும் வந்ததில்லை. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளுக்கு வந்து பணம் கேட்டு தொல்லை செய்கின்றனர்.
இந்த பிரச்சனைகள் முதலமைச்சரின் செவிக்குச் செல்லவே இந்தக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவரும், செங்கல் சூளைகளைத் தடை செய்ததால் பாதிக்கப்பட்டவர்கள் தான். இந்த விவகாரத்தில் அரசும், துறை சார்ந்த அதிகாரிகளும் உண்மை நிலையை அறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தர மனமில்லாத மு.க.ஸ்டாலின்? - வன்னியர் சங்கம் குற்றச்சாட்டு