பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை மருத்துவப் படிப்பு படித்து வந்த யாழினி என்பவர், கடந்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், யாழினி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் மதிக்கத்தக்க தங்க நகையைப் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து, யாழினி பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டம் மங்கூன் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற இருவர் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்துள்ளனர். அப்போது, அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டபோது, அவர்களது இருசக்கர வாகனத்தில் இருந்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் கீழே விழுந்துள்ளது.
இதையும் படிங்க:திருப்பூரில் ஒரு "தானா சேர்ந்த கூட்டம்"..! அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து வசூல்! கும்பல் சிக்கியது எப்படி?
இதனை அடுத்து, அவர்கள் இருவரும் தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவர்கள் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அதில், தப்பி ஓடியவர்கள் திருச்சி மாவட்டம் ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (26) மற்றும் திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் (24) என்பது தெரிய வந்துள்ளது.
பின்னர் இருவரையும் கைது செய்ய தேடுதல் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இருவரில் சந்தோஷ்குமார் மட்டும் காவல் துறையினரிடம் பிடிபட்டுள்ளார். மேலும், அர்ஜுன் தலைமறைவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சந்தோஷ் குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பெண் மருத்துவரிடம் தங்க நகையைப் பறித்துச் சென்றதும், மேலும் இவர்கள் விபத்துக்குள்ளான 4ஆம் தேதி அன்று மங்கூன் பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வேறு ஒரு பெண்ணின் கழுத்திலிருந்து ஒன்றே முக்கால் சவரன் நகையை பறித்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர், சந்தோஷ்குமாரை பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அர்ஜுனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:கூகுள் மேப் மூலம் செல்போன் திருடனை பிடித்த இளைஞர்! இணையத்தில் பகிர்ந்த ருசிகர தகவல்!