சென்னை: பெண் காவலர்களை பற்றி அவதூறாக பேசியதாக சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில் கடந்த 4ஆம் தேதி, சைபர் கிரைம் போலீசார் யூடியூபர் சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து சவுக்கு சங்கர் மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை சென்னை குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்ற முதன்மை நீதிபதி, சவுக்கு சங்கரை 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் நேர்காணல் அளித்த விவகாரத்தில், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தனியார் யூடியூப் சேனலை சேர்ந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டு இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, 2022-இல் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது பெண்கள் பற்றி இழிவாக பேசியதற்காக சைபர் கிரைம் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.