சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள பூவனூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், நேற்று அவரது மனைவி வேதவள்ளியுடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்த போது, சுக்கம்பட்டி அருகே அவர்களது வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து வலுவலர் தாமோதரன் மற்றும் மோட்டார் வாகன் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், வேகத்தடையில் லாரி மெதுவாக சென்றபோது பின்னால் 2 பைக்குகள் சென்றுள்ளது. அதற்கு பின்னால் வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் ரமேஷ் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி வந்து, விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமின்றி, அந்த இடத்தில் வேகத்தடை இருப்பது தெரிந்தும், ஓட்டுநர் பேருந்தை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதன் விளைவாக, பேருந்து ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பேருந்தின் தகுதி சான்றும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய வீராணம் போலீசார், தனியார் பேருந்து ஓட்டுநர் ரமேஷை கைது செய்துள்ளனர்.
முன்னதாக, இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை ஏர்போர்ட்டுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்.. விமான நிலைய அதிகாரிகள் கொடுத்த வார்னிங்!