சென்னை: கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் கிண்டி மருத்துவமனையில் வருகை புரிந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிகிச்சை பெற்று வரும் மருத்துவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து மருத்துவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,"மருத்துவரான பாலாஜி என்பவரை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார்.
இதனால் மருத்துவர் இப்போது ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மே மாதம் முதல் அந்த இளைஞரின் தாயார் கேன்சர் பிரச்சினைக்காக இந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பிறகு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதற்கிடையே சிகிச்சையின் போது ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து அந்த நபர் ஏற்கனவே மருத்துவர் பாலாஜியை சந்தித்துக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில் காலை மருத்துவமனைக்கு வந்த இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் அவர் இப்போது ஐசியுவில் உள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவருக்கு கத்திக்குத்து: மருத்துவர்கள் ஆங்காங்கே போராட்டம் - தொடரும் பதற்றம்!
தற்போது மருத்துவர் மயக்க நிலையில் இருக்கிறார். 3 முதல் 4 மணி நேரத்தில் அவர் சுயநினைவுக்குத் திரும்புவார் எனத் தெரிகிறது. தாக்குதல் நடத்திய அந்த இளைஞர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கச் செயல். அந்த இளைஞர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்.
மருத்துவருக்கு தலை பகுதியில் 4 பகுதியில் குத்தப்பட்டுள்ளது. மேலும், இடது கழுத்து, இடது தோள்பட்டை, காது மடலில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறேன். தாக்குதல் நடத்திய நபரின் தாயாருக்கு அரசு மருத்துவமனையில் 6 மாதங்களாகச் சரியான முறையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
திடீரென அந்த இளைஞர் இந்த தவறான முடிவை எடுத்துள்ளார். பாலஜி சிறந்த மருத்துவர் என்பதில் சந்தேகம் இல்லை. பல ஆயிரம் பேர் இங்கு வந்து செல்கிறார்கள். இந்த நபரே கூட ஏற்கனவே பல முறை தாயாருக்குச் சிகிச்சை அளிக்க வந்து சென்று இருக்கிறார். இதன் காரணமாகவே மருத்துவர் உட்பட யாருக்கும் அவர் மீது எந்தவொரு சந்தேகமும் வரவில்லை. இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்போம். மற்ற நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்" என தெரிவித்தார்.