மதுரை:தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு விழா நேற்று(பிப்.27) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர், பொதுக்கூட்டம் நிறைவு விழா முடிந்த பின் மதுரை சென்றார்.
அங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், 'எதிர்காலத்தை உருவாக்குதல் – வாகனத் தொழிலில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் இயக்கம்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இதனையடுத்து இன்று(பிப்.28) காலை ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடிக்குச் சென்று அங்கு, பல்வேறு திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார். அங்கிருந்து திருநெல்வேலிக்குச் சென்று பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்குச் செல்ல உள்ளார்.
முன்னதாக என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,"இன்று தமிழகம் வந்துள்ள நான் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை நினைத்துப் பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்.ஜிஆர். அதனால்தான் அவர் இன்னமும் மக்களால் நினைத்து பார்க்கப்படுகிறார்.
அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல திமுக ஆட்சி நடைபெறுகிறது. எம்.ஜி.ஆரை போலவே ஜெயலலிதாவும் மக்கள் மனதில் நிலை பெற்றுள்ளார். தமிழகத்தில் கடைசி நல்லாட்சியை கொடுத்தவர் ஜெயலலிதாதான் என்று பேசினார்.
இதையும் படிங்க:கொலைவெறி தாக்குதல்: 3 பேருக்கு கடுங்காவல் தண்டனை விதித்த சென்னை அமர்வு நீதிமன்றம்