தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிறிஸ்துமஸ் பண்டிகை: குடியரசு தலைவர் முதல் தவெக விஜய் வரை அரசியல் தலைவர்கள் வாழ்த்து! - CHRISTMAS GREETINGS

கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (@rashtrapatibhvn, @narendramodi, @mkstalin)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 22 hours ago

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (டிசம்பர் 25) புதன்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவை வரவேற்கும் விதமாக, தேவாலயங்களில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு - "அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த சிறப்பு நாள் இயேசு கிறிஸ்துவின் அன்பும், இரக்கமும் நமக்கு நினைவூட்டுகிறது. இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், சமுதாயத்தில் மகிழ்ச்சியை பரப்பவும், சமத்துவத்தை மேம்படுத்தவும், ஒற்றுமை உணர்வை வளர்க்கவும் பாடுபடுவோம்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி - "அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையைக் காட்டட்டும்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - "அனைத்து மதத்தவரும், அனைத்து மொழி பேசுவோரும் நல்லிணக்கத்தோடும், சம உரிமையோடும், சமத்துவ மனப்பான்மையுடனும் வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழ நமது அரசு தொடர்ந்து பாடுபடும்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி -"மகிழ்ச்சி பொங்கிட, உவகைப் பெருக்குடன் கொண்டாட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கும் நாம் செய்ய வேண்டும். அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:திருச்சியில் களைக்கட்டிய கிறிஸ்துமஸ்.. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

பாமக நிறுவனர் இராமதாசு -"எதிரிகளை மன்னிப்பதற்குக் கற்றுக் கொடுத்த மகான் இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயேசு விரும்பியதைப் போல, உலகில் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துங்கள். அதன் மூலம் உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும். போட்டி பொறாமைகள் அகல வேண்டும் ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை -"மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை -"கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைவரின் வாழ்வும் மகிழ்ச்சியான தருணங்களால் நிரம்பியிருக்கட்டும். சமூகத்தில், அமைதியும், அன்பும் நிரம்பியிருக்கட்டும். அனைவருக்கும், இயேசு பெருமான் தமது ஆசீர்வாதங்களை தொடர்ந்து அருளட்டும்" வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் -"இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்து நீடித்திருக்கட்டும்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமமுக டி.டி.வி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details