சென்னை:ஆன்மீக ஆசிரமம் நடத்தி வந்த பிரேமானந்தா, 1994ஆம் ஆண்டுபாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது ஆசிரமத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், 76 லட்சம் ரூபாய்க்கான நிரந்தர வைப்பீடு, 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுகள், தங்க நகைகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், பிரேமானந்தாவுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதன் தொடர்ச்சியாக, கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடி சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்தின் கீழ் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பாக, 2005-ஆம் ஆண்டு பிரேமானந்தா அறக்கட்டளைக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை எதிர்த்து பிரேமானந்தா அறக்கட்டளை சார்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 17 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், நேற்று செவ்வாய்கிழமை (டிசம்பர் 10) நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், "கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரேமானந்தா கடந்த 2011-ஆம் ஆண்டு சிறையில் இறந்து விட்டதாகவும், இந்நிலையில் அந்நிய செலவாணி மோசடி சட்டத்தின் கீழ் சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பாக, சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
அறக்கட்டளையின் வரவு செலவுகள் குறித்து நோட்டீஸ் அனுப்ப அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. 1950 முதல் 1980-ஆம் ஆண்டு வரையான அறக்கட்டளையின் வரவு, செலவு கணக்குகள் அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை தரப்பில் எந்த தவறும் இல்லை. விளக்கங்கள் அளிக்கப்பட்டும் 20 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என தெரிவிக்கப்பட்டது.