தருமபுரி: தருமபுரியில் நடைபெற்ற தேமுதிக தொண்டர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தருமபுரி வந்திருந்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், முதலமைச்சரின் சொந்த தொகுதியில் கூலிப்படையால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல படுகொலைகள் நடந்துள்ளன. கடந்த மூன்று மாதத்தில் 6 படுகொலை நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் கொலையில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆம்ஸ்ட்ராங் கொலையில் 8 பேரும் கைது செய்யப்படவில்லை. அவர்களாகவே சரண்டர் ஆனார்கள். ஆனால், காவல்துறை கைது செய்ததாக தவறாக சொல்கிறார்கள்.
கள்ளக்குறிச்சியில் 70 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இந்த கொலை, உயிரிழப்பு போன்ற பாதிப்புகள் எல்லாம் பட்டியலின மக்களுக்கு தான் நடந்து வருகிறது. மேலும், திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன், செல்வப்பெருந்தகை இருவரும் கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என சொல்கின்றனர். பட்டியலின சமூக மக்களின் பாதுகாவலர்கள் என சொல்லும் திமுக அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 40க்கு 40 தொகுதிகள் வென்றெடுத்ததாக முதலமைச்சர் சொல்கிறார். ஆனால், பட்டியல் சமூக மக்களுக்கு தினமும் சேதாரம் ஏற்படுகிறது. கள்ளக்குறிச்சியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் திமுகவினர் தான் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.