சென்னை:உலக மகளிர் தினத்தையொட்டி, தேமுதிக மகளிர் அணி சார்பில், மறைந்த விஜயகாந்த் நினைவிடத்திற்கு ஜோதி ஏந்தியபடி சென்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து, பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற மகளிரணி ஆலோசனைக் கூட்டதில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “தேர்தல் வந்தால் கூட்டணிக்காக வருவது இயற்கை. இன்றைகைக்கு இருக்கக்கூடிய கட்சிகள் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வீட்டிற்கு வந்து அமைச்சர்கள் அழைப்பு விடுத்தார்கள். தேமுதிக சார்பில் தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் அதிமுக அலுவலகத்திற்குச் சென்று, அவர்களை சந்தித்து வந்துள்ளனர். இது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை.
இன்னும் ஒரு வார காலத்திற்குள் அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்பதை தெரிவிப்போம். தேமுதிகவைப் பொறுத்தவரையில், எங்களுடையை உரிமையை கேட்க வேண்டியது எங்களுடைய கடைமை. இன்று தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளுக்கும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இருக்கின்றனர். அந்த வகையில், தேமுதிகவிற்கும் ராஜ்யசபா உறுப்பினர் வேண்டும் என்ற எங்கள் உரிமையை நிச்சயமாக நாங்கள் கேட்போம், கேட்டு இருக்கிறோம்.
பாஜகவின் அனைத்து தலைவர்களும் கேப்டனின் கோயிலுக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். தேர்தல் என்று வந்துவிட்டால், அனைவரும் வந்து கூட்டணிக்காக பேசுவது ஒரு சம்பிரதாயம்தான். அதனால் இந்த கட்சி, அந்த கட்சி என்பதுதான் என இல்லை. அதிமுக எங்கள் இல்லத்திற்கு வந்ததால் எங்கள் நிர்வாகிகளை அவர்களது அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளோம். அடுத்தக்கட்ட முடிவு என்ன என்பதை நாங்கள் தெரியப்படுத்துவோம்.
நடக்கவிருக்கும் தேர்தலில் இருப்பது நான்கு வழி தான். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, தனித்து போட்டி. அதில் திமுக ஏற்கனவே கூட்டணி அமைத்து விட்டது. தேமுதிகவிற்கு எது நல்லதோ அந்த முடிவை நாங்கள் எடுப்போம். போதைப்பொருள் கடத்தலில், திமுக பிரமுகர்கள் ஈடுபட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சிக்கு வந்தால் எப்போதும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கும் என்பது நிரூபணமாகி உள்ளது.
மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என முதல்வர் கூறுகிறார். சிறந்த ஆட்சி என்பதை மக்கள் சொல்ல வேண்டும். ஆட்சியாளர்கள் தற்பெருமை பேசக்கூடாது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து, பொறுத்திருந்து பாருங்கள்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் விசிக-2, மதிமுக-1 முடிவுக்கு வந்த தொகுதி பங்கீடு!