சென்னை:சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 179 பயணிகளுடன் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடு வானில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த விமானத்தில், குடும்பத்தோடு பயணித்துக் கொண்டு இருந்த ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த தீப்திசரிசு வீர வெங்கட்ராமன் (28) என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து, தீப்தியின் குடும்பத்தினர் விமான பணிப்பெண்களிடம் தெரிவித்தனர். பின் விமான பணிப்பெண்கள் தலைமை விமானிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்தார்.
இதனைத் தொடரந்து, தீப்தி இருந்த பகுதியில் உள்ள ஆண் பயணிகள் அனைவரையும் வேறு இடத்திற்கு மாற்றி விட்டு, அவசரமாக விமானத்துக்குள் ஒரு திரை தடுப்பை அமைத்த விமான பணிப்பெண்கள், விமானத்தில் பயணித்த பெண் டாக்டர் மற்றும் மூத்த பெண் பயணிகள், தீப்தி சரிசுக்கு பிரசவம் பார்த்தனர். விமானம் நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோதே தீப்தி அழகான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
விமான பணிப்பெண்கள் துரிதமாக செயல்பட்டு அந்த விமானத்தில் பயணித்த நிறைமாத கர்ப்பிணியையும், அவர் குழந்தையையும் காப்பாற்றியதால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.