சென்னை: பொங்கல் பண்டிகையில் மதம் இல்லை, சாதி இல்லை.வன்முறை இல்லை. உழைப்பைப் போற்றும் தத்துவம்தான் இருக்கிறது. சமத்துவம் இருக்கிறது. தமிழர்களின் பண்பாடும், வீரமும், கொண்டாட்டமும் நிறைந்த விழா பொங்கல் விழா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எத்தனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், என் கொளத்தூர் தொகுதியில் எனது மக்களுடன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி எனக்கு எப்போதுமே ’ஸ்பெஷல்’. அதுவும் அது பொங்கல் விழா என்றால், அது எவ்வளவு ஸ்பெஷல் எனச் சொல்லவா வேண்டும்! ஒரு வாரமாகச் சட்டமன்றக் கூட்டத்தொடர், அதில் பரபரப்பான பல நிகழ்வுகள் என்று எல்லாவற்றையும் முடித்துவிட்டு நேராக இங்கேதான் வந்திருக்கிறேன்.
உற்சாக திருநாள்:எனக்கு ’எனர்ஜி’ வேண்டுமென்றாலும் நீங்கள்தான், கொஞ்சம் ’ரிலாக்ஸ்’ ஆகவேண்டும் என்றாலும் கொளத்தூர்தான். அதுவும் தமிழர்களின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாளை உங்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும். பொங்கலையும் தி.மு.க.வையும் பிரிக்க முடியாது. திராவிட இயக்கம் மிக உற்சாகத்தோடு கொண்டாடும் ஒரு திருநாள் என்றால் அது பொங்கல் திருநாள்தான். ஏனென்றால், இதில் மதம் இல்லை! சாதி இல்லை.வன்முறை இல்லை. உழைப்பைப் போற்றும் தத்துவம்தான் இருக்கிறது. சமத்துவம் இருக்கிறது. தமிழர்களின் பண்பாடும், வீரமும், கொண்டாட்டமும் நிறைந்த விழா பொங்கல் விழா.