தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாயு கசிவு விவகாரம்: மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 100 மணி நேர சோதனை நிறைவு.. பள்ளி திறப்பு எப்போது? - GAS LEAK ISSUE IN SCHOOL

சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு வெளியானதாகக் கூறப்படும் தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 100 மணி நேர சோதனை நிறைவுற்ற நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

பள்ளியின் முன்பு திரண்ட பெற்றோர்
பள்ளியின் முன்பு திரண்ட பெற்றோர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 11:02 PM IST

சென்னை : சென்னை திருவொற்றியூர் கிராம தெருவில் தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த அக் 25ம் தேதியன்று வழக்கம் போல் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றபோது 3வது தளத்தில் 3 வகுப்பறைகளில் இருந்த மாணவ, மாணவியருக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதில், 35க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அருகில் இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மாணவ, மாணவியருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது அங்கு ஏற்பட்ட வாயு கசிவாக இருக்கலாம் என்ற நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த அக் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பள்ளியில் காற்று பரிசோதனை நடத்தினர்.

மேலும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்து பள்ளியில் எந்தவித வாயு கசிவும் ஏற்படவில்லை எனக் கூறினர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய சோதனையிலும் எந்த விதமான வாயு கசிவும் இல்லை என கடந்த அக் 28ம் தேதி தனது அறிக்கையை சமர்பித்தது.

இந்நிலையில் கடந்த நவ 4ம் தேதியன்று தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட போது மாணவர்களுக்கு எதனால் பாதப்பு ஏற்பட்டது என பள்ளி நிர்வாகம் தெரிவிக்காத நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதற்கிடையில் ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டு வகுப்பறையில் இருந்த மாணவர்களுக்கு மீண்டும் மூச்சு திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 10 மாணவிகள் பாதிப்படைந்து அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவிகளை தனியார் பள்ளிகள் பிரிவின் இயக்குநர் நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். மேலும், பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று சோதனை செய்யும் வாகனத்தை வைத்து தீவிர ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என மாசு கட்டுபாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க :வாயு கசிவு விவகாரம்: திருவொற்றியூரில் மூடப்பட்ட தனியார் பள்ளி மீண்டும் எப்போது திறப்பு?

மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைக்கு பிறகே பள்ளி திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த 4ம் தேதியன்று மாலை பள்ளிக்கு கொண்டு வரப்பட்ட காற்று பரிசோதனை வாகனம் சுமார் 100 மணி நேரம் தொடர்ந்து பள்ளியில் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள காற்றை உறிஞ்சி அதில் என்ன மாதிரியான நச்சு உள்ளது என்பதை கண்டறியும் பணி நடைபெற்றது.

இப்பணி நேற்று( நவ 8) மாலையுடன் முடிவடைந்தது. தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த பின்னரே பள்ளி திறக்கப்படும் என்ற சூழ்நிலை இருப்பதால் பள்ளி திறப்பு எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில் கடந்த 6ம் தேதியன்று பள்ளி நிர்வாகத்தினர் பள்ளியில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பள்ளி திறப்பது குறித்தும், மாணவர்களின் கல்விக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த இருப்பதாகவும் கூறி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

அன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளியின் முதல்வர் ரூத்வனிதா, "தற்போது பள்ளியில் எந்த வித வாயு கசிவும் இல்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தங்களுடைய அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மேலும் 4ம் தேதி மீண்டும் மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்தி வருகிறது.

மேலும், தற்போது பெற்றோர்களின் கோரிக்கைகளை பெற்று முதற்கட்டமாக 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளை திறக்கவும், பிறகு 7,8,9 ஆகிய வகுப்புகளும், மற்ற வகுப்புகளை படிப்படியாக திறப்பது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநரத்தில் பேசி நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 100 மணி நேர சோதனை முடிவுற்றது. மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரிய சோதனை அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என தெரியாத சூழ்நிலையில், அரசு பொதுத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை பள்ளி நிர்வாகம் நடத்தி வருகிறது.

ஆனால் ஆன்லைன் வகுப்பில் மாணவர்களால் போதிய கவனம் செலுத்த முடியாது எனவும், மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு உடனடியாக பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கூறுகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details