தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக - சிபிஎம் கூட்டணியில் விரிசலா? - மதுரை அரசியலில் நடப்பது என்ன?

மதுரையில் ஆளும் திமுக, கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? என்ற பேச்சு எழுந்துள்ளது. அதற்கான காரணம் என்னவென்பது குறித்து பார்க்கலாம்

பேரணி நடத்திய எம்பி வெங்கடேசன், போஸ்டர்
பேரணி நடத்திய எம்பி வெங்கடேசன், போஸ்டர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2024, 8:17 PM IST

மதுரை:மக்கள் நல கூட்டணி உடைந்ததிலிருந்து அந்தக் கூட்டணியில் இருந்த தேமுதிக-வைத் தவிர மற்ற இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் திமுகவோடு கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு தேர்தல்களை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் சு.வெங்கடேசன் எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திமுக x சிபிஎம்:அதன் பிறகு கடந்த தேர்தலில் போதும் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு மீண்டும் சு.வெங்கடேசன் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக கூட்டணியின் அசுரபலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றியை சுலபமாக்கியது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் கடந்த சில நாட்களாக திமுக x சிபிஎம் என மதுரை அரசியலில் பரபரப்பு தொற்றியுள்ளது.

வீட்டு மனை பட்டா வழங்க கோரி பேரணி:இதற்கு காரணம் கடந்த செப்டம்பர் மாதம் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், மதுரையில் ஏறக்குறைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். அந்நிகழ்ச்சியை அமைச்சர் மூர்த்தி மாநாடு போன்று நடத்தினார். அக்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் கலந்து கொண்டார்.

‘கண்டா வரச் சொல்லுங்க’ போஸ்டர்: அதன் பிறகு கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்றவர் சு.வெங்கடேசன் எம்பி. இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக மதுரை வண்டியூர் பகுதியில் சு.வெங்கடேசன் எம்.பி.க்கு எதிராக ‘கண்டா வரச் சொல்லுங்க’ என வண்டியூர் பொதுமக்கள் என்று குறிப்பிட்டு அப்பகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க:ஆளுநருக்கு ஆயிரம் போஸ்ட் அனுப்பிய திராவிடர் விடுதலைக் கழகம்!

இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதி பேரணி நடத்தியதால், திமுகவினர் இது போன்ற அரசியலை செய்வதாக பேச்சு எழுந்துள்ளது.

தட்டிக்கேட்டதால் போஸ்டர்: இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிபிஎம் சார்பாக வண்டியூர் பகுதியில் நடைபெற்ற கட்சியின் உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி, வண்டியூர் பகுதியில் சிபிஎம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து மக்களுக்காக களத்தில் நிற்கிறது. ஆனால் ரேஷன் கடையில் தரமற்ற பொருட்களை வழங்கக் கூடியவர்களை தட்டி கேட்டால் அவர்கள் நமக்கு எதிராக சுவரொட்டி ஒட்டி இழிவுபடுத்த நினைக்கிறார்கள்.

மக்களுக்காக கம்யூனிஸ்டுகளை விட போராடக்கூடிய ஒரு கட்சி இருந்தால் அவர்களுக்கு நாம் பதில் அளிக்கலாம். ஆகையால் இது எல்லாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்த கூட்டத்திற்கு முன்பாக அதே வண்டியூரில் சாலை வசதி மிக மோசமாக இருப்பதாகவும், ரேஷன் கடையில் பொருட்கள் தரமற்றதாக வழங்குவதாகவும் குறிப்பிட்டு சிபிஎம் சார்பாக போஸ்டர் அமைக்கப்பட்டிருந்தது.

திமுக வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்:இது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கூட்டணியில் இருந்து கொண்டே கூட்டணிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுவதாக அவர்கள் அமைச்சர் மூர்த்தியிடமும், எம்.எல்.ஏ தளபதியிடமும் புகார் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மக்கள் பிரச்சினைகளில் எப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமரசம் செய்து கொண்டது கிடையாது.

ஆகையால் அவர்களுக்கு தேவையான முக்கிய போராட்டங்களை திமுக ஆட்சியில் இருந்தாலும் மேற்கொண்டுள்ளது. இதை ஆளும் அரசுக்கு நெருக்கடி என்பதாக பார்ப்பது தவறு‌. மேலும் அது போன்ற போராட்டங்களின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோள்களை திமுக நிறைவேற்றி உள்ளது என சிபிஎம் கட்சியைச் சேர்ந்த அதன் பிரதிநிதிகள் குறிப்பிடுகின்றனர்.

இரு தரப்பில் இருந்தும் பேசுகின்ற ஏதோ ஒரு சில வார்த்தைகளை சிலர் பிடித்துக் கொண்டு கூட்டணியில் முட்டல், உரசல் என்பதாக திரித்தி விடுகின்றனர். எப்போதும் போல் இரண்டு கட்சியும் அவரவர் கட்சிக்கேற்ற கொள்கையின் அடிப்படையில் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர் எனவும் அவர்களே குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் இன்று திமுக வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலத்தூர் பகுதியில் நடைபெற்றது.

விரைவில் பட்டா: அதில் பேசிய அமைச்சர் மூர்த்தி, "13 ஆயிரம் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க பொதுமக்கள் பங்கேற்பில் தான் நடைபெறும். ஆகையால் இந்தப் பட்டா வழங்குவதற்கு வேறு எவரும் உரிமை கூற முடியாது என பேசி உள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறிப்பிட்டு தான்" என மதுரை அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பு கிளம்பியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details