சென்னை:கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜியை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் (25) என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் மாநகரை அதிர வைத்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் நலமுடன் உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கத்தியால் மருத்துவரை குத்திய இளைஞர் விக்னேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழிசை சௌந்தரராஜன்:பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் பக்கத்தில், '' மருத்துவர்கள் அனைத்து நோயாளிகளையும் பாகுபாடற்ற மனநிலையிலேயே சிகிச்சை அளிக்கிறார்கள். நோயாளியின் உறவினர்கள் தங்கள் உறவினர்கள் நோயோடு போராடுகிறார்கள் என்ற வேதனை அவர்களுக்கு இருக்கலாம். ஆனால், அது மருத்துவர்களை தாக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கக் கூடாது.. மருத்துவர் இதய நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து இருக்கிறார்.. அவர் பூரண குணமடைய வேண்டும் என்று பிராத்திக்கிறேன்... மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்'' என கூறியுள்ளார்.
அண்ணாமலை:தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்க பதிவில், '' ஏற்கனவே பல சம்பவங்கள் நிகழ்ந்தும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், ஒவ்வொரு முறையும் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளின் போது, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறுவதோடு மட்டுமே நிறுத்திக் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், தொடர்ச்சியாக பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகியிருக்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நெல்லை அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம், வேலூர் அரசு மருத்துவமனையில், மருத்துவப் பயிற்சி மாணவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். கடந்த வாரம், திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில், மருத்துவர் மீது, திமுக உறுப்பினர் உள்ளிட்ட 10 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது, மருத்துவர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை திமுக அரசு உணர வேண்டும்'' என கூறியுள்ளார்.
இதையும் படிங்க:மருத்துவருக்கு கத்திக்குத்து: மருத்துவர்கள் ஆங்காங்கே போராட்டம் - தொடரும் பதற்றம்!
அன்புமணி ராமதாஸ்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது; '' சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி, விக்னேஷ் என்பரால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். தமது தாய்க்கு சரியான மருத்துவம் அளிக்கவில்லை என்று கூறி இந்தத் தாக்குதலை விக்னேஷ் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
அப்பாவி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அரசும், காவல்துறையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழ்நாட்டில் அப்பாவி பொதுமக்களில் தொடங்கி மருத்துவர்கள் வரை யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதைத் தான் இந்த நிகழ்வு காட்டுகிறது. இத்தகைய கொடுமைகள் ஒருபுறம் நடக்கும் நிலையில், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து வருவது குரூரமான நகைச்சுவை ஆகும். கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
ஜி.கே. வாசன்: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' தமிழக அரசு, அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற, அச்சுறுத்தும் செய்தியாக இது இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதற்கு விசாரணை தேவை. சமீப காலமாக குடிப்பழக்கத்திற்கும், போதைப்பொருளுக்கும் அடிமையாகி முறையற்ற செயல்கள் அதிகமாகிக்கொண்டே போகிறது. அதன் அடிப்படையிலே முன் விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்'' என கூறியுள்ளார்.