தமிழ்நாடு

tamil nadu

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; நாகேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்ற போலீசார்! - Armstrong Murder case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 2:53 PM IST

Armstrong Murder case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 24வது நபராக சேர்க்கப்பட்டுள்ள அஸ்வத்தாமனின் தந்தை நாகேந்திரனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.

நாகேந்திரன்
நாகேந்திரன் (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வேலூர் மத்திய சிறையில் கைதியாக இருக்கும் வட சென்னை ரவுடி நாகேந்திரன் 24வது நபராக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய மகன் அஸ்வத்தாமன் உடன் சேர்ந்து நாகேந்திரனும் வேலூர் மத்திய சிறையில் இருந்தே திட்டம் போட்டதாக செம்பியம் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறையில் இருக்கும் நாகேந்திரனை கைது செய்வதற்கான வாரண்டை கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் தனிப்படை போலீசார் பெற்றனர்.

அதன்பின், ஆகஸ்ட் 9ம் தேதி வேலூர் மத்திய சிறைக்குச் சென்று, அங்கு சிறைத்துறை அதிகாரிகளிடம் கைது செய்வதற்கான வாரண்ட் ஆவணங்களை சமர்ப்பித்தனர். அப்போது நாகேந்திரனிடம் ஆவணத்தை போலீசார் வழங்க முயன்ற போது, "கொலைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை எதற்காக வழக்கில் சேர்த்திருக்கிறீர்கள்? என் மகன் அஸ்வத்தாமனை எதற்காக கைது செய்து இருக்கிறீர்கள் எனக் கூறி, கைது ஆவணத்தை வாங்காமல் கையெழுத்து போடாமல் போலீசாரிடம் ரகளை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 30 நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்தனர். ஆனாலும், நாகேந்திரன் கையொப்பம் இட மறுத்ததால், கைதுக்கான ஆவணத்தில், சிறைத் துறை அதிகாரிகளின் கையொப்பம் பெற்று நாகேந்திரன் உள்ள அறைக்கு முன்பாக சுவரில் ஒட்டி விட்டுச் சென்றனர்.

இந்த வழக்கில் கைது செய்த நாகேந்திரனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பலத்த பாதுகாப்புடன் போலீசார் இன்று அவரை அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்கு போலீசார் அனுமதி கேட்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாகேந்திரனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில், பல தகவல் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி - எழும்பூர் நீதிமன்றம் - Armstorng Murder case

ABOUT THE AUTHOR

...view details