பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருமாந்துறை பகுதியில் டிடிபிஎல் என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிக்கு சென்னையிலிருந்து - திருச்சி நோக்கி திமுக கொடி கட்டி வந்த சொகுசு கார் ஒன்று வந்தது. அப்போது Fast Tag மூலம் கட்டணம் செலுத்த முயன்ற போது அது காலாவதியானது தெரிய வந்தது.
பின்னர், ரொக்கமாகச் சுங்க கட்டணத்தைச் செலுத்துமாறு ஊழியர்கள் கார் ஓட்டுநரிடம் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு அவர் பணம் கட்ட முடியாது, நான் திமுக கவுன்சிலர் என்னிடமே பணம் கேட்கிறீர்களா என்று கூறி திட்டியவாறே காரினை வேகமாக எடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அங்குள்ள தடுப்புகளை உடைத்துக்கொண்டு கார் செல்லும் போது சுங்கச்சாவடி ஊழியர்கள் அதனைத் தடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர், காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து, சுங்கச்சாவடி ஊழியர்களைத் தாக்கியுள்ளார். இவருடன், காரில் இருந்த சிலரும் கீழே இறங்கி வந்து சுங்கச்சாவடி ஊழியர்களைத் தாக்கியுள்ளனர்.