திருப்பூர்: சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணு மாற்றுத்திறனாளிகள் குறித்தும் மறுபிறவி குறித்தும் சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். அப்போது, அப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவருக்கும், மகாவிஷ்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், பல்வேறு தரப்பினரும் மகாவிஷ்ணுவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பள்ளியில் தவறான கருத்துக்களை சொல்லி சொற்பொழிவு ஆற்றிய சம்பவம் கண்டிக்கத்தக்கது எனவும் கருத்து பதிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "இந்த சம்பவம் மிகவும் கண்டனத்திற்கு உரியது எனவும் பள்ளி ஆசிரியர்களை தவறாக பேசியும் மாணவர்களை தவறான முறையில் திசை திருப்ப முயற்சித்த மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.
மேலும், ''எனது துறையான பள்ளிக்குள் சென்று அவர் அத்துமீறிய சம்பவம் எனது ஏரியாவில் வந்து கை வைத்ததற்கு சமம்.. என்னுடைய பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களை தவறாக பேசிய அவரின் நடவடிக்கைகள் குறித்து விசாரித்து அவர் எந்தெந்த பள்ளிகளில் சொற்பொழிவு ஆற்றியுள்ளார் என்பது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அமைச்சர் கூறியிருந்தார்.
மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியை சங்கரி பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோல மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சென்னையில் மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சு குறித்து புகார் மனு அளித்துள்ளனர். அவர் மீது மாற்றுத் திறனாளிகள் வன்கொடுமை பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த குளத்து பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்தில், அவிநாசி போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பரம்பொருள் அறக்கட்டளைக்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னி உள்ளிட்ட நாடுகளில் கிளைகள் இருப்பதும் தமிழகத்தில் அவிநாசி குளத்துப்பாளையம் பகுதியில் தலைமை அலுவலகம் இருப்பதும் தெரிய வந்தது.
மேலும், மகாவிஷ்ணு தற்பொழுது சிட்னியில் பயிற்சி வகுப்பு எடுக்க சென்றுள்ளதாகவும், இரண்டு மூன்று தினங்களில் அவர் திரும்பி வருவார் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், மகாவிஷ்ணுவின் பிறப்பிடம், அவரது பின்புலம், வருமான வாய்ப்புகள் மற்றும் அறக்கட்டளைக்காண நன்கொடை விவரங்கள் மற்றும் என்னென்ன மாதிரியான பணிகளில் அறக்கட்டளை ஈடுபடுகிறது? எந்தெந்த பள்ளிகளில் மகாவிஷ்ணு சொற்பொழிவு ஆற்றியுள்ளார்? என்னென்ன தலைப்புகளில் அவர் சொற்பொழிவு செய்து வருகிறார் என பல்வேறு கோணங்களில் முதல்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:பள்ளிகளில் ஆன்மீக வகுப்பு தவறா? பரம்பொருள் மகாவிஷ்ணுவின் பேச்சு சர்ச்சை ஆனது ஏன்?