நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த பன்னீர் மகன் சண்முகவேல் (42) என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில், அப்பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் இன்று (ஏப்ரல் 28) காலை 8 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
காலை 10:30 மணிக்கு புதுப்பேட்டை மீனவ கிராமத்திற்கு கிழக்கே கடலில் 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடிக்க வலையை இறக்கியபோது, அங்கு சின்ன சுருக்குவலை பொருத்திய 3 பைபர் படகுகளில் வந்த பூம்புகார் மீனவர்கள், நாங்கள் பார்த்த மீனை நீங்கள் எப்படி பிடிக்கலாம் எனக் கூறியதால், இருதரப்பு மீனவர்களிடையே வாக்குவாதமாகி பின்னர் மோதல் ஏற்பட்டுள்ளது.
பூம்புகார் மீனவர்கள் தரங்கம்பாடி மீனவர்களைத் தாக்கி, படகின் மீது மோதி, வலைகளைச் சேதப்படுத்தியதாக தரங்கம்பாடி மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதில், தரங்கம்பாடியைச் சேர்ந்த பன்னீர் மகன் சதீஷ்குமார் (31), செல்லதுரை மகன் நித்திஷ் (24) ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர். படகிலிருந்த சக மீனவர்கள் காயமடைந்த மீனவர்களை மீட்டு ஊர் பஞ்சாயத்தார்களுக்குத் தகவல் அளித்துள்ளனர்.
மேலும், காயம் அடைந்த மீனவர்களை சிகிச்சைக்காக தரங்கம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்ந்துள்ளனர். பின்னர், அவர்கள் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மீனவர்களை பூம்புகார் எம்எல்ஏ-வும், திமுக மாவட்டச் செயலாளருமான நிவேதா எம்.முருகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.