திருநெல்வேலி: நெல்லை பழைய பேட்டை தென்காசி சாலையில் ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரி இயங்கி வருகிறது. நெல்லை மாவட்டத்தின் முதல் அரசு கல்லூரியான இங்கு சுமார் 4,500 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி வளாகத்தின் பின் பகுதியில் கடைசியாக உள்ள கட்டிடத்தில் இளங்கலை வணிகவியல் பிரிவு செயல்பட்டு வருகிறது.
இதில் இரண்டாம் ஆண்டு வகுப்பறை முழுவதும் ரத்த துளிகள், ரத்தக் கறைகள் இருந்துள்ளது. இதனை கல்லூரி பாதுகாப்பு பணியில் இருந்த இரவு காவலாளி பார்த்து, கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு வந்த மாணவிகளும் முதல்வரிடம் இதே புகாரை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் கல்லூரி வகுப்பறையில் ஆய்வு மேற்கொண்டனர். கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறை முழுவதும் இருந்த ரத்தக் கறைகளின் மாதிரிகள் சேமிக்கப்பட்டு தடய அறிவியல் பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்ததுடன், சம்பவம் தொடர்பாக ஆய்வும் மேற்கொண்டு வருகின்றனர்.