சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அய்யாப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (33). அதே பகுதியைச் சேர்ந்தவர் திருமணமான நித்தியா (33). இவர் சிவக்குமார் உடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். மேலும், இவர்கள் இருவரும் திருமுல்லைவாயல் பகுதியில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த ஜிம்மில் சென்னையைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், உடல் பருமனை குறைக்க கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இவருக்கும் திருமணமாகியுள்ளது.
இவ்வாறு இப்பெண் ஜிம்முக்கு வந்து சென்றபோது, சிவக்குமாருக்கும், அப்பெண்ணுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி தனிமையான உறவாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி, ஜிம்மில் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனை நித்தியா தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். மேலும், இது சம்பந்தமாக இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், நித்தியா இந்த வீடியோக்களை காட்டி அப்பெண்ணிடம் மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் இதுகுறித்து அப்பெண் சிவக்குமாரிடம் கூறியுள்ளார். அதற்கு சிவகுமார் அப்பெண் கேட்கும் பணத்தை கொடுத்துவிடு, இல்லை என்றால் அசிங்கமாகிவிடும் என தெரிவித்துள்ளார். இதே போன்று, நித்தியா பலமுறை மிரட்டி பல லட்சம் ரூபாய் பறித்ததாக கூறப்படுகிறது.