விருதுநகர்: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருமாள்தேவன் பட்டியைச் சேர்ந்தவர் காளிக்குமார் (33). இவர் சரக்கு வாகனத்தின் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் வாகனத்தில் நேற்று திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருச்சுழி - ராமேஸ்வரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே திடீரென 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், காளிக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த காளிக்குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், இவரது உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மர்ம கும்பலை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் அருப்புக்கோட்டை - திருச்சுழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது, அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார், சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், காவல்துறைக்கும் ஏற்பட்ட தகராறில் போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில், டிஎஸ்பி தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் அதிகளவில் இருந்ததால், மேற்கொண்டு போலீசாரை வரவழைத்து போராட்டக்காரர்களை கலைத்தனர்.
இந்நிலையில், டிஎஸ்பி தலைமுடியைப் பிடித்து இழுத்து அத்துமீறிய விவகாரத்தில் 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பாலமுருகன் என்பவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார். தற்போது பொன் குமார், காளிமுத்து, சஞ்சய் குமார், பாலாஜி, ஜெயக்குமார், ஜெயசூர்யா ஆகிய மேலும் ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ள, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரியை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த விடியா திமுக அரசுக்கும், பொம்மை முதல்வருக்கும் கடும் கண்டனம்.
அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யுமாறும், காவல்துறையினர் உட்பட தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க :82 வயதில் கருநாகக்கடி.. 107 வயதில் எள்ளுப்பேரன்களுடன் கனகாபிஷேகம் கொண்டாடிய பேச்சியம்மாள் பாட்டி! - Tiruppur Pechiammal 107 years old