சென்னை:சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய குற்றம் சாட்டப்படும் நபராக, கொலையாளிகளை ஒருங்கிணைத்ததாக வழக்கறிஞர் ஹரிகரன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது 5வது நாளாக இன்று ஹரிகரனிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்று மாலை விசாரணை முடிந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார். இந்த நிலையில், பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், "இவர் கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் உறவினர் எனக் கூறப்படுகிறது. இவரின் தந்தை திருநாவுக்கரசு சென்னை ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பிரதீப் காவல்துறையில் ஊர்காவல் படையில் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டபோது அவரது இறுதிச்சடங்கு முழுவதும் பிரதீப் இருந்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட திருமலை, அருள், பொன்னை பாலு ஆகிய 3 பேருடன் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பந்தமாக பேச்சு வார்த்தையில் பிரதீப் ஈடுபட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்காக அருள் தனியாக ஒரு செல்போனை வாங்கி பிரதீப்பிற்கு கொடுத்துள்ளதும், அந்த செல்போனில் மட்டும் பிரதீப், அருள், பொன்னை பாலு, திருமலை ஆகியோருடன் தொடர்ந்து பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற நபர்களிடம் பேசும் போது தனது வழக்கமான செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதன் மூலம் கொலையில் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக தனித்தனி செல்போன்களை பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது.