கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மதா ஜெயக்குமார் (34). இவர் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள அரசு வங்கிக் கிளையில் மேலாளராக இருந்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வந்த ஜெயக்குமார், கடந்த ஜூலையில் எர்ணாகுளத்தில் உள்ள பாலரிவட்டம் கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அவர் இன்னும் அங்கு பொறுப்பேற்கவில்லை.
இதற்கிடையில், கோழிக்கோட்டில் உள்ள கிளைக்கு இர்ஷாத் என்பவர் மேலாளராக நியமிக்கப்பட்டார். இவர் அந்தக் கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை மறுமதிப்பீடுக்கு ஆய்வு செய்தார். கடந்த ஜூன் 13 முதல் ஜூலை 6 வரை அடகு வைக்கப்பட்டிருந்த 17 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளில் போலி நகைகள் இருப்பது தெரிய வந்தது. உடனே மேலாளர் இர்ஷாத், இதுகுறித்து வடகரை போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கோழிக்கோடு கிளையில் ஏற்கனவே மேலாளராக இருந்து இடமாற்றப்பட்ட மதா ஜெயக்குமார் பாலரிவட்டம் கிளையில் பொறுப்பேற்காமல் இருப்பதால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதனால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், மதா ஜெயக்குமார் தெலங்கானாவில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று மதா ஜெயக்குமாரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், “கோழிக்கோட்டில் உள்ள வங்கியில் இருந்து 26.5 கிலோ நகைகள் மோசடி செய்ததாகவும், அந்த நகைகளை பல்வேறு இடங்களில் உள்ள நண்பர்களிடம் பிரித்துக் கொடுத்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும், திருப்பூரைச் சேர்ந்த நண்பர், தனியார் வங்கி மேலாளர் கார்த்தி உதவியுடன் இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.