மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், பட்டவர்த்தி அருகே உள்ள நடராஜபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ராஜேஷ்(26). சில வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு விபத்தில், ஒரு காலை இழந்த ராஜேஷூக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது, இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக இருந்து வந்தார்.
இந்நிலையில், தனது நண்பர்களுடன் நேற்றிரவு பேசிக்கொண்டிருந்த ராஜேஷ் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் இயற்கை உபாதை கழித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, பெட்ரோல் பங்கிற்கு அருகே மயிலாடுதுறை செல்லக்கூடிய பிரதான சாலையில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் ராஜேஷை வழிமறித்துள்ளனர்.
பின்னர், தாங்கள் கொண்டுவந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ராஜேஷின் தலை மற்றும் உடல் பகுதி முழுவதும் சரிமாரியாக வெட்டியுள்ளனர். இதனால், ரத்த வெள்ளத்தில் ராஜேஷ் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த கொடூரமான சம்பவம் தொடர்பாக தகவலறிந்து அங்கு வந்த அப்பகுதியினர், ராஜேஷின் பெற்றோர், அவரது உறவினர்கள் என அனைவரும் இக்கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து, சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மணல்மேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர், நாகப்பட்டினத்திலிருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, முதற்கட்ட விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா நேரில் வந்து பார்வையிட்டார்.