கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்தார். இந்த புகாரில் 3 ஆசிரியர்கள் கைதாகியதை அடுத்து மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மூன்று ஆசிரியர்களின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி கடந்த ஒரு மாதகாலமாக பள்ளிக்கு செல்லவில்லை. இதுகுறித்து அறிந்த பள்ளியின் தலைமையாசிரியர் சக மாணவிகளிடம் விசாரித்தார்.
அவர்களிடம் சரியான பதில் கிடைக்காததால், தலைமையாசிரியர் அந்த மாணவியை தேடி வீட்டிற்கே சென்றார். அப்போது எதற்காக மாணவியை ஒரு மாதமாக பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கிறீர்கள்? என அவரது தாயாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த தாயார் எனது மகள் கர்ப்பமாக இருந்ததாகவும், அதற்காக மருத்துவமனைக்கு சென்று வந்ததாகவும் கூறி அதிர வைத்துள்ளார்.
பள்ளி ஆசிரியர்கள் அத்துமீறல்
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் மேற்கொண்டு விசாரித்தபோது, சிறுமியின் கர்ப்பத்திற்கு அவர் பயின்ற பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு இடைநிலை ஆசிரியரும் தான் காரணம் என்றும், மூன்று ஆசிரியர்களும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.
சிறுமியின் தாய் புகார்
உடனே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்க தாயாரை தலைமையாசிரியர் அறிவுறுத்தினார். அதன் பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த மாணவியை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
கூட்டு பாலியல் வன்கொடுமை
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மாணவி பயின்ற அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் 3 பேர் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன் காரணமாக மாணவி கர்ப்பமானதும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக பர்கூர் டி.எஸ்.பி. தலைமையில் அனைத்து மகளிர் போலீசார் அரசு பள்ளி ஆசிரியர்களான 3 பேரை போக்சோ வழக்கில் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மூவரையும் பள்ளிக் கல்வித் துறையினர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள நிலையில், கைதான ஆசிரியர்களின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவி பயின்ற அரசுப் பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் கேட்க ஈடிவி பாரத் செய்தியாளர் கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலர் மற்றும் காவல்துறையை அணுகியபோது, ''கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சம்மந்தப்பட்ட ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். '' என்று மட்டும் தெரிவித்தனர்.