தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் 'My V3 Ads' நிர்வாகிகள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு.. பின்னணி என்ன?

Myv3 Ads issue: மை வி3 நிறுவனத்தினர் மீது சட்ட விரோதமான கூட்டத்தில் ஒன்று சேர ஆட்களை சேர்த்தல், முறையற்ற தடுப்பு, பொது இடங்களில் தொல்லை கொடுத்தல் ஆகிய 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் தொடரும் MY V3 நிறுவனத்தின் விவகாரம்
கோவையில் தொடரும் MY V3 நிறுவனத்தின் விவகாரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 3:45 PM IST

கோயம்புத்தூர்: கோவையை தலைமையிடமாகக் கொண்டு Myv3 Ads என்ற செயலியை சக்தியானந்தன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும் யூடியூப் சமூக வலைதளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அதில் 360 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி லட்சக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் இருந்து இதில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு கூறியபடி அந்நிறுவனம் மாதம்மாதம் பணம் வழங்கி வந்துள்ளது.

இந்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் கிரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவும், பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி நீலாம்பூர் பகுதியில் உள்ள புறவழிச்சாலையில் ஜனவரி 29ஆம் தேதி திங்கட்கிழமை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அந்நிறுவனம் தங்களுக்கு உரிய பணத்தை வழங்கி வருவதாகவும், வேண்டும் என்றே பொய் வழக்கு பதியபட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நிறுவன உரிமையாளர் சத்யானந்தன் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் பேசி கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த அவர்கள் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் MY V3 ads நிறுவனத்தின் மீது சிங்காநல்லூர் போலிசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நீலம்பூர் புறவழிச்சாலையில் நேற்று(ஜன.30) MY V3 ads நிறுவனத்தின் உறுப்பினர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அனுமதியின்றி ஒன்று கூடியதால் இருகூர் வி.ஏ.ஓ ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் சட்டவிரோதமான கூட்டத்தில் ஒன்றுசேர ஆட்களை சேர்த்தல், முறையற்ற தடுப்பு, பொது இடங்களில் தொல்லை கொடுத்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:வேலூரில் அரசுப் பள்ளியைப் பூட்டி மக்கள் போராட்டம்.. தலைமை ஆசிரியர் தொல்லை என குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details